Published : 22 Apr 2023 03:55 AM
Last Updated : 22 Apr 2023 03:55 AM

காவலர் எரிபொருள் படி ரூ.515 ஆக உயர்வு உட்பட 101 அறிவிப்புகள் - சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை: காவல் துறையில் காவலர் முதல் தலைமைக் காவலர், சிறப்பு உதவி ஆய்வாளர் வரை உள்ளவர்களுக்கு எரிபொருள் படி மாதம் ஒன்றுக்கு ரூ.370-ல் இருந்து ரூ.515 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்பது உட்பட சட்டப்பேரவையில் 101 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். 21 நாள் அலுவல்கள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

அவர் கூறியதாவது: சென்னை காவல் துறையில் உள்ள பாதுகாப்பு பிரிவுக்கு, வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் புதிய கருவிகள் வழங்கப்படும். சென்னையில் 2,000 கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக நிறுவப்படும். தமிழகத்தில் ஐபிஎஸ் அல்லாத காவல் துணை கண்காணிப்பாளர் (தரம்-1) முதல், காவல் கண்காணிப்பாளர் வரையும், நுண்ணறிவு பிரிவில் உள்ள காவல் ஆய்வாளர்கள் முதல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான அதிகாரிகளுக்கும் 1,223 லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன.

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள 57 போக்குவரத்து சிக்னல்கள் ரூ.4.27 கோடியில் மாற்றப்படும். குற்றவாளிகளை கைது செய்ய, ரிமோட் மூலம் விலங்கிடும் 25 கருவிகள் ரூ.75 லட்சத்தில் வாங்கப்படும். க்ரிப்டோ கரன்சி மோசடியை கண்டுபிடிக்க செயின் பகுப்பாய்வு ரியாக்டர் கருவி ரூ.1 கோடியில் வாங்கப்படும். காவலர் - பொதுமக்கள் இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக 250 காவல் நிலையங்களில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர், கரூர் - நங்கவரம், காஞ்சிபுரம் - பொன்னேரிக்கரை, வேலூர் - பிரம்மபுரம், பெரம்பலூர் ஆகிய 5 இடங்களில் ரூ.2.58 கோடியில் தாலுகா காவல் நிலையங்கள், வானகரம், மேடவாக்கம், புதூர் ஆகிய இடங்களில் தலா ரூ.8.35கோடியில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும். நுண்ணறிவு பிரிவில், 383 பணியாளர்களை கொண்டு ரூ.57.51 கோடியில் தீவிரவாத தடுப்பு பிரிவு அமைக்கப்படும்.

முதலீட்டாளர்கள் தொடர்பான வழக்குகளை கையாள ரூ.27 கோடியில் தனி பிரிவு உருவாக்கப்படும். காவலர் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர் மதிப்பூதியம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.250-ல் இருந்து ரூ.1,000 ஆகவும், போக்குவரத்து செலவினம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.100-ல்இருந்து ரூ.250 ஆகவும் உயர்த்திவழங்கப்படும். காவலர்களுக்கு சீருடை மற்றும் இதர பொருட்கள்கொள்முதல் செய்து வழங்குவதற்கு பதிலாக ஆண்டுதோறும் ரூ.4,500 சீருடைப்படி வழங்கப்படும். காவலர் முதல் தலைமைக் காவலர், சிறப்பு உதவி ஆய்வாளர் வரை உள்ளவர்களுக்கு எரிபொருள் படி மாதம் ஒன்றுக்கு ரூ.370-ல் இருந்து ரூ.515 ஆக உயர்த்தி வழங்கப்படும். ஆவடி, தாம்பரம் காவலர்களுக்கு தினமும் ரூ.300 வீதம் உணவுப்படி வழங்கப்படும்.

தமிழ்நாடு சிறப்பு காவல் அணிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படும். காவலர் அங்காடி வசதி, மருத்துவமனை வசதி ஆகியவை ஊர்க்காவல் படையினருக்கும் விரிவுபடுத்தப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம், திருச்சி - திருவெறும்பூர், திருநெல்வேலி - ராதாபுரம், கள்ளக்குறிச்சி - ரிஷிவந்தியம் ஆகிய 4 இடங்களில் தலா ரூ.1.81 கோடியில் புதிய தீயணைப்பு, மீட்பு பணி நிலையங்கள் அமைக்கப்படும். தீயணைப்பு,மீட்பு பணிகள் துறையில் மதுரையில் இருந்து பிரித்து, திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்ட புதிய மண்டலம் உருவாக்கப்படும். தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை பணியாளர்களுக்கு சேமநல நிதிக்கான மானியம் ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

காப்பீட்டு இடர் பாதுகாப்பு தொகையை பொருத்தவரை, தீயணைப்போர் முதல், உதவி மாவட்ட அலுவலர் வரை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாகவும், மாவட்டஅலுவலர், துணை இயக்குநர், இணை இயக்குநர் வரை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாகவும், கூடுதல் இயக்குநருக்கு ரூ.10 லட்சமாகவும், தலைமை இயக்குநருக்கு ரூ.10 லட்சத்தில் இருந்துரூ.20 லட்சமாகவும் உயர்த்தப்படுகிறது.

இவ்வாறு முதல்வர் அறிவித்தார். முதல்வர் பேசும்போது மொத்தம் 101 அறிவிப்புகளை வெளியிட்டார்.

பேரவை ஒத்திவைப்பு: சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜன.9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜன.13 வரை நடந்தது. அத்துடன், பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த மார்ச் 20-ம்தேதியும், வேளாண் பட்ஜெட் 21-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரைநடந்தது. நிறைவு நாளில் நிதித்துறை, வேளாண் துறை அமைச்சர்களின் பதில் உரை இடம்பெற்றது.

மார்ச் 29-ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில், 21 நாள் பேரவை அலுவல்கள் நேற்றுடன் முடிந்தன. இதையடுத்து, பேரவையை ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் பேரவையை ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x