Published : 22 Apr 2023 09:57 AM
Last Updated : 22 Apr 2023 09:57 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கட்டப்பட்ட 18 நாட்களில் இடிந்த பாலம் நேற்று முழுமையாக அகற்றப்பட்டது. தரமின்றிக் கட்டப்பட்டதாக புகார் தெரிவித்துள்ள பொதுமக்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் அனைத்துப் பணிகளின் தரத்தையும் ஆய்வு செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள சிராஜுதீன் நகரில் செல்லும் ஆதாம் வாய்க்காலில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.3.84 கோடியில், 2 ஆயிரம் மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்துக்கு கான்கிரீட் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. மேலும்,வாய்க்காலின் குறுக்கே 3 இடங்களில் 7 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்தில் சிறு பாலங்கள் கட்டப்பட்டன.
இந்நிலையில், சிராஜுதீன் நகர் பெரிய சாலை வாய்க்காலின் குறுக்கே கடந்த 18 நாட்களுக்கு முன் கட்டப்பட்ட சிறு பாலத்தின் மீது நேற்று முன்தினம் மணல் லாரி சென்றபோது, திடீரென பாலம் இடிந்தது.
அங்கு ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார் ஆகியோர், புதிதாக கட்டப்பட்ட இந்தப் பாலம் இன்னும் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப் படவில்லை என்றும், பாலத்தின் இருபுறம் கனரக வாகனங்கள் செல்லாமல் இருக்க தடுப்புகள் வைக்கப் பட்டிருந்ததாகவும், அதை அகற்றிவிட்டு லாரி சென்றதால்தான் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும், லாரி உரிமையாளரே சொந்த செலவில் புதிய பாலம் கட்டித் தருவதாக ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், இடிந்து விழுந்த பாலத்தை ஒப்பந்ததாரர் நேற்று முழுவதுமாக இடித்து அகற்றினார். மேலும், பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் வைத்து, போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, "பாலத்தின் கட்டுமானப் பணி நடைபெறும்போதே, தரமற்ற வகையில் கட்டப்படுவதாக ஒப்பந்ததாரிடம் முறையிட்டோம். ஆனால், அவர் அதை கண்டுகொள்ளவில்லை. தற்போது பாலம் இடிந்துவிட்டது. எனவே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் கே.மணிகண்டன்(அதிமுக) கூறும்போது, "விபத்துக்குள்ளான லாரி உரிமையாளர், பாலத்தின் கட்டுமானம் தரமில்லாததால்தான், அது இடிந்து விழுந்து விட்டதாகக் கூறி, பாலத்தின் கட்டுமானங்களை கையால் பெயர்த்துக் காட்டியுள்ளார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் லாரி உரிமையாளரை மிரட்டியதால், அவர் பயந்துபோய் பாலத்தைக் கட்டித்தர ஒப்புக் கொண்டுள்ளார்.
இடிந்து விழுந்த பாலத்தின் கட்டுமானங்கள் அங்கு இருந்தால், தரம் தொடர்பாக ஆய்வுகள் நடைபெறும் என்பதால்தான், அவற்றைஅவசரம் அவசரமாக இடித்து, முழுமையாக அப்புறப்படுத்திவிட்டனர். தஞ்சாவூரில் நடைபெறும் ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணிகள் அனைத்தையும் ஆய்வு செய்து, தரமில்லாமல் கட்டப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
மாநகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் கூறும்போது, "லாரிஉரிமையாளரே தவறை ஒப்புக்கொண்டு, பாலத்துக்கான செலவுத் தொகையை தருவதாக எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். நாங்கள் யாரையும் மிரட்டவில்லை" என்றார். இதற்கிடையே, இடிந்த பாலத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று பார்வையிட்டு, பாலத்தின் தரம் குறித்து விசாரித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT