Published : 05 Jul 2014 10:08 AM
Last Updated : 05 Jul 2014 10:08 AM

அட்சயா காப்பகத்திலிருந்து 221 பேரை உடனே விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை அட்சயா காப்பகத்தில் தங்கியிருப்போரில் 221 பேரை உடனடியாக விடுவிக்க காப்பக நிர்வாகிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அட்சயா காப்பக முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மதுரை மாவட்டத் தலைவர் முத்துராணி உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் வி. ராமசுப்பிரமணியன், வி.எம். வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் ஆணையர் டி. கீதா, தனது 4-வது ஆய்வு அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், ‘ரயிலை விட்டு இறங்கியவர்கள், ரயில் நிலையம், பஸ் நிலையத்தில் நின்றிருந்தவர்களை காப்பகத்துக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த நடவடிக்கை ஆள் கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக சிறைப்பிடித்தல் போன்றதாகும். இது தொடர்பாக காப்பக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அந்த காப்பகத்தில் 297 ஆண்கள், 143 பெண்கள் மட்டுமன்றி மனநலம் பாதித்த 64 ஆண்கள், 27 பெண்களும் தங்கியுள்ளனர். இவர்களில் 247 பேர் காப்பகத்தை விட்டு வெளியேறி குடும்பத்தினருடன் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் 26 பேரால் பிறர் துணையின்றி செயல்பட முடியாது என்று உயர் நீதிமன்ற நிர்வாகப் பதிவாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த 26 பேரும் மறு உத்தரவு வரும் வரை காப்பகத்திலேயே தங்கியிருக்க வேண்டும்.

இந்த வழக்கில் பதிவாளர் அறிக்கை மற்றும் வழக்கறிஞர் ஆணையரின் 4 அறிக்கைகளுக்கும் காப்பகம் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அவர்களது வாதத்தை ஏற்க முடியாது. டீன் நியமித்த மருத்துவர்கள், உயர் நீதிமன்றத்தின் பொறுப்பான அதிகாரியான பதிவாளர் கொண்ட குழு ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதை, பொய் என்று சொல்ல முடியாது. மேலும், மனுதாரரின் ஆட்சேபத்தை காரணமாக வைத்து நல்ல நிலையில் உள்ளவர்களை காப்பகத்திலிருந்து விடுவிக்க மறுக்க முடியாது. எனவே, நல்ல நிலையில் உள்ள 221 பேரையும் உடனடியாக காப்பகத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x