Published : 22 Apr 2023 04:27 AM
Last Updated : 22 Apr 2023 04:27 AM
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளை எங்கு வைத்து பராமரிப்பது என்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான பழமைவாய்ந்த சீர்காழி சட்டைநாதர் கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே 24-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஏப்.16-ம் தேதி யாகசாலை பணிகளுக்காக, மேற்கு கோபுர வாசல் அருகேயுள்ள நந்தவனப் பகுதியில் பள்ளம் தோண்டிய போது 23 சுவாமி உலோக சிலைகள், 410 முழுமையான செப்பேடுகள், 83 சேதமடைந்த நிலையிலான செப்பேடுகள், பூஜைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இப்பொருட்கள் கோயிலில் உள்ள அறை ஒன்றில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸார் காவலுடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஏப்.17-ம் தேதி இந்து சமய அறநிலையத் துறையின் கோயில்கள், மடங்களின் ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு, நூலாக்க திட்டப் பணி குழுவினர் வந்து செப்பேடுகளை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேற்று மீண்டும் கோயிலுக்கு வந்து ஆய்வு செய்தார். தொல்லியல் துறையினர் ஆட்சியருடன் வந்து சிலைகள், செப்பேடுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: இக்கோயிலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள், செப்பேடுகள் குறித்து உடனடியாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 1878-ம் ஆண்டு சட்டப்படி, அப்பொருட்கள் குறித்து ஆய்வு செய்ய, அரசு அவற்றை கையகப்படுத்தி வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
நாகை அரசு அருங்காட்சியக காப்பாளர் தற்போது பார்வையிட்டுள்ளார். ஏப்.26-ம் தேதி அவர் தமது குழுவினருடன் வந்து, ரசாயனம் மூலம் சிலைகளை சுத்தம் செய்து ஆய்வு மேற்கொண்ட பின்னர், அவர் அறிக்கையின்படி அரசிதழில் வெளியிடப்படும். அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வுக்குப் பின்னர் இப்பொருட்களை இங்கேயே அருங்காட்சியகமாக வைத்து பராமரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளது குறித்து கேட்டதற்கு, ‘இதுகுறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. ஆய்வுக்குப் பின்னர் அப்பொருட்கள் குறித்த முழு விவரங்கள் தெரிந்த பின்னர், அது தொடர்பான அறிக்கையின் அடிப்படையில்தான் அந்த முடிவு எடுக்கப்படும்.
இதற்கென்று உள்ள தொல்லியல் துறை அரசுக்கு தெரிவிக்கும், அதனடிப்படையில் அரசு முடிவு எடுக்கும்’ என்றார். மேலும், சட்டைநாதர் கோயில் குடமுழுக்கு நாளில் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்றார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், சீர்காழி கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆட்சியர் பார்வையிட்ட பின்னர் வருவாய்த் துறையினர் அறையை மூடி சீல் வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT