Published : 18 Sep 2017 04:12 PM
Last Updated : 18 Sep 2017 04:12 PM

சபாநாயகர் நெருக்கடியில் எடுத்த முடிவே தகுதி நீக்கம்: தமிமுன் அன்சாரி பேட்டி

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து கண்டனம் தெரிவித்த அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி சட்டப்பேரவை தலைவர் நெருக்கடி காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார்.

'தி இந்து' தமிழ் சார்பில் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ,.வும் மனித நேய ஜனநாயக கட்சி தலைவருமான தமிமுன் அன்சாரியிடம் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து உங்கள் கருத்து?

நிச்சயமாக இந்த தகுதி நீக்கம் நிற்காது, எடியூரப்பா வழக்கில் கர்நாடக சட்டப்பேரவை தலைவர் உத்தரவை உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அந்த அடிப்படையில் இங்கும் நடக்கும் என்று நம்புகிறோம்.

இதே போன்ற ஒரு நிலையில் உத்தரகாண்டில் மிக சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் சட்டப்பேரவை தலைவர் நடவடிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதே?

நீதிமன்றம் பல நேரங்களில் பல விசித்திர தீர்ப்புகளை வழங்குகின்றன. தமிழ்நாட்டில் நீதிமன்றம் என்ன செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

அப்படியானால் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக்கொள்ளும் என்கிறீர்களா?

நிச்சயம் எடுத்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மக்களுடைய உணர்வு மதிக்கப்பட வேண்டும். மக்களுடைய உணர்வுகளுக்கு எதிரான நடவடிக்கையாகவே சட்டப்பேரவை தலைவர் நடவடிக்கை உள்ளது. கட்சி சார்பற்ற பொதுமக்கள் எவருமே இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

சபாநாயகர் பொறுமையிழந்திருப்பதாக தெரிகிறது. சட்டப்பேரவை தலைவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாக கருதுகிறோம். கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜகவின் எச்.ராஜா சட்டப்பேரவை தலைவர் இப்படித்தான் செயல்படுவார் என்று சொன்னார் அதன்படிதான் இப்போது நடந்துள்ளது.

அப்படியானால் டெல்லி அரசின் சொல்படிதான் சட்டப்பேரவை தலைவரும், முதல்வரும் செயல்படுவார்கள் என தெரிகிறது. இவ்வாறு தமிமுன் அன்சாரி பேட்டி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x