Published : 22 Apr 2023 12:28 AM
Last Updated : 22 Apr 2023 12:28 AM
சென்னை: ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற விழாவில், 2000 இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். விழாவில் பேசிய அவர், "இஸ்லாமிய பெருமக்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், இஸ்லாமியர்களுக்குமான உறவு என்பது ஒரு வரலாற்றுக்குரிய உறவு, மகத்தான உறவு. அதுவும் இஸ்லாமியச் சகோதரர்கள் மீது கலைஞர் எந்தளவுக்கு அளவற்ற அன்பை, பாசத்தை வைத்திருந்தார் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். அந்த அன்பும் பாசமும் என்றும் அழியாது! அது தொடர்ந்து நிலைத்திருக்கும்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒடுக்கப்பட்டோருக்கும், சிறுபான்மையினருக்கும் என்றைக்கும் துணை நிற்கக்கூடிய இயக்கமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய காலகட்டங்களில், சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்திருக்கக்கூடிய இஸ்லாமிய பெருமக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
ஒன்றை நான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்று சொன்னால், கலைஞர் ஆட்சியில் இருந்த நேரத்தில்தான் அதாவது, 1969-ல், மீலாதுநபிக்கு முதன்முதலில் அரசு விடுமுறையை அறிவித்தார். அதன்பிறகு வந்த அதிமுக ஆட்சி அதனை ரத்து செய்தது. மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு, ரத்து செய்ததை ரத்து செய்து மீண்டும் மீலாதுநபிக்கு அரசு விடுமுறையை ஏற்படுத்தித் தந்தார்.
உருது பேசக்கூடிய முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது; “சிறுபான்மையினர் நல ஆணையம்”அமைத்தது; ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கையை 2000 என்பதிலிருந்து 2400 வரை உயர்த்தியது; வக்ஃபு வாரிய சொத்துகளைப் பராமரிப்பதற்காக முதன்முறையாக 40 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியது; ஹஜ் பயணத்திற்குக் குலுக்கல் முறையில் ஆண்டிற்கு 1800 பேருக்கு மிகாமல் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட முறையைக் கைவிட்டு, 1999 முதல் விண்ணப்பிக்கக்கூடிய அனைவருக்கும் அந்த ஹஜ் பயணம் மேற்கொள்ளக்கூடிய அனுமதியை வழங்கியது;
பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தில் இருந்து தனியே பிரித்து, இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை அமைத்தது; இஸ்லாமியரின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டு, “உருது அகாடமி” தொடங்கியது; 2001-இல் சென்னையில் “காயிதே மில்லத் மணிமண்டபம்” அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்து, அடிக்கல் நாட்டி பின்னர் கட்டிமுடித்திட ஆவன செய்து கொடுத்தது;
2007ம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது என திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினுடைய சாதனைகளை சொல்லியிருக்க முடியும்.
என்னுடைய தலைமையில் அமைந்திருக்கக்கூடிய ஆட்சியை, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி என்று சொல்ல நான் விரும்பவில்லை. ஏனென்றால், ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, சிறுபான்மை நலன் காப்பதை திராவிட மாடல் ஆட்சியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக உறுதி எடுத்துக்கொண்டு நடைபோட்டு வருகிறோம்.
இன்றைக்கு தான் சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்திருக்கிறது. கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கி இந்த மாதம் 21ம் தேதி முடிவுற்றது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு இயற்கை மரணத்திற்கான உதவித் தொகை 20,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக உயர்த்தி வழங்கியிருக்கிறோம்.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை 1000 ரூபாய் கல்வி உதவித் தொகை, சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில், 2 சிறுபான்மையினர் கல்லூரி மாணவர் விடுதிகள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவியர் விடுதிக்கு 6 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடம் எனப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம்.
சிறுபான்மை இன மக்களின் அரணாகத் திகழக்கூடிய திராவிட மாடல் அரசும் என்றென்றும் இஸ்லாமிய மக்களைத் தாயன்போடு பரிந்து காக்கக்கூடிய இந்த நன்னாளில் உங்களைல்லாம் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆண்டுதோறும், கொளத்தூர் தொகுதி இஸ்லாமிய சகோதர, சகோதரிகளைச் சந்திப்பது, அவர்களுக்கு ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பது மகிழ்ச்சிக்குரியதாக எனக்கு அமைந்திருக்கிறது. அந்த வகையில், இங்கே குழுமியிருக்கக்கூடிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு மீண்டும் ஒருமுறை என்னுடைய ரமலான் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்து, என்றென்றும் உங்கள் வாழ்வில், இன்பமும், அன்பும், கருணையும், வளமும் பொங்கிச் செழிக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT