Published : 21 Apr 2023 07:13 PM
Last Updated : 21 Apr 2023 07:13 PM

சென்னை ஐஐடி-யில் மாணவர் மரணம்: ஒரே ஆண்டில் 4-வது தற்கொலை?

சென்னை: சென்னையில் உள்ள ஐஐடி விடுதியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அது தற்கொலையாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள ஐஐடியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கெமிக்கல் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று விடுதியில் இருந்தபோது அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியாகும் பட்சத்தில், இந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட நான்காவது மாணவர் இவர்.

இதனிடையே, இந்த சம்பவம் குறித்து ஐஐடி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ''கெமிக்கல் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த இளங்கலை மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் இன்று (ஏப்ரல் 21) மதியம் அகால மரணமடைந்ததை தெரிவிப்பதில் ஆழ்ந்த வேதனையடைகிறோம். ஐஐடி தனக்கு சொந்தமான ஒன்றை இழந்துவிட்டது. தொழில் முறை சமூகம் ஒரு நல்ல மாணவரை இழந்துவிட்டது. மாணவரின் இறப்புக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி நிறுவனம் தனது இதயப்பூர்வ இரங்கலைத் தெரிவிப்பதுடன், உயிரிழந்த மாணவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த இக்கட்டான தருணத்தில் மாணவர்களின் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் ஐஐடி நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. மன அழுத்தத்தில் உள்ள மாணவர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களுக்கு உதவ அனைத்து நடவடிக்கைகளையும் ஐஐடி மெட்ராஸ் எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம். பிரிந்த ஆன்மா சாந்தியடையட்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 32 வயது மாணவர் ஒருவர், தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பாக கடந்த மார்ச் மாதத்தில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்த 20 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கடந்த பிப்ரவரியில் தற்கொலை செய்து கொண்டார்.

சில தினங்களுக்கு முன்பு சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடியிடம் தமிழ் இந்து திசை டிஜிட்டல் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட நேர்காணலில், மாணவர்களின் தற்கொலை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் இதோ...

மாணவர்கள் தற்கொலைக்கான காரணங்கள் என்னென்ன? இதனை எவ்வாறு தடுப்பது?

“படிப்பு சார்ந்த சிரமங்கள், தனிப்பட்ட சிரமங்கள், நிதி சார்ந்த சிரமங்கள், மருத்துவ பிரச்சினைகள் என இதற்கு நான்கு காரணங்கள் இருக்கின்றன. இந்த நான்குமே கலந்தும் இருக்கலாம். இந்த கோவிட் காலத்தில் மாணவர்களின் சமூக தொடர்பும் குறைந்துபோய்விட்டது. மாணவர்களில் பலர் வீட்டிலேயே இருந்துவிட்டு திடீரென கல்லூரிக்கு வருகிறார்கள். இது சமூகம் சார்ந்த சிரமங்களை ஏற்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனமும் ஒப்புக்கொண்டிருக்கிறது.

மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த செயல்களைச் செய்ய முடிந்தால் அவர்களுக்கு மன அழுத்தம் இருக்காது. இரண்டாவது, இணை திறன் அதாவது ஏதாவது பாடல் பாடுவது, ஆடுவது, இசை இசைப்பது, ஓவியம் வரைவது, போட்டோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு மன அழுத்தம் குறைவாகவே இருக்கிறது. எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சிறியவர்களாக இருக்கும்போதே, ஏதாவது ஒன்றில் ஈடுபாடு கொள்பவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x