Published : 21 Apr 2023 05:26 PM
Last Updated : 21 Apr 2023 05:26 PM

“விரும்பியோர் 12 மணி நேரம் உழைக்கலாம் என்பதும் ஒரு வகை உழைப்புச் சுரண்டலே” - கி.வீரமணி விமர்சனம்

கி.வீரமணி | கோப்புப்படம்

சென்னை: "சம்பளத்துக்காக அதிக நேரம் உழைப்பது என்ற மனோ நிலையை உருவாக்குவது மனித உரிமைக்கும், நலனுக்கும் எதிரானதல்லவா? விரும்பியோர் 12 மணிநேரம் உழைக்கலாம் என்று கூறுவது, ஒருவகை உழைப்புச் சுரண்டலே" என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப.21) அவசர அவசரமாக ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணிநேரமாக உயர்த்துவது தொடர்பான மசோதா இன்று சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்புமூலம் நிறைவேற்றப்பட்டது என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு: இதனைக் கண்டித்து கூட்டணிக் கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகளும் வெளிநடப்பு செய்துள்ளன."வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழ்நாட்டை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எந்தத் தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது சம்பந்தமாகக் குழு அமைக்கப்படும்" என்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் விளக்கம்:தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில்,"வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை பார்க்கவேண்டும். இந்த நேரத்தை 4 நாள்களில் முடித்துவிட்ட பிறகு, ஐந்தாவது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்குச் சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது. அனைத்து நிறுவனங்களுக்கும் இந்தச் சட்டம் இல்லை. விரும்பக் கூடிய தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

1945 இல் பெற்றுத் தந்த உரிமை: நாளொன்றுக்கு 14 மணிநேரம் உழைப்பு என்ற ஒரு காலகட்டம் இருந்ததுண்டு. 1945 நவம்பர் 28 அன்று டாக்டர் அம்பேத்கரின் முயற்சியால் தொழிலாளர் பிரதிநிதி, ஆலை உரிமையாளர் பிரதிநிதி, அரசுப் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழுவில் முத்தரப்பு ஒப்பந்த அடிப்படையில், தொழிலாளர் பணிநேரம் 8 மணிநேரமாகக் குறைக்கப்பட்டது என்பது வரலாறு. இப்பொழுது நாம் பின்னோக்கிப் பயணிக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.நெகிழ்வுத்தன்மை எங்கிருந்து வந்தது? இதில் நெகிழ்வுத் தன்மை எங்கிருந்து வந்தது? சம்பளத்துக்காக அதிக நேரம் உழைப்பது என்ற மனோ நிலையை உருவாக்குவது மனித உரிமைக்கும், நலனுக்கும் எதிரானதல்லவா.

மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல: இதில் வருவாய் என்பதைவிட மனித உழைப்பு, மனித நேயம், நலம், குடும்ப நலன் என்பவை முக்கியமாகக் கருத்தூன்றி கவனிக்கப்படவேண்டாமா? விரும்பியோர் 12 மணிநேரம் உழைக்கலாம் என்று கூறுவது, ஒருவகை உழைப்புச் சுரண்டலே.

தேவை மறுபரிசீலனை: எல்லா வகைகளிலும் மக்கள் நலன் கருதி செயல்படும் ‘திராவிட மாடல்’ நல்லரசுக்கு ஏற்படக் கூடிய இந்த அவப்பெயரைத் தவிர்க்கவேண்டும் - தவிர்க்கப்படும் - மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் உறுதியாகவே நம்புகிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x