Published : 21 Apr 2023 04:47 PM
Last Updated : 21 Apr 2023 04:47 PM

“உதயநிதி, சபரீசன் குறித்த பழனிவேல் தியாகராஜன் ஆடியோ... முதல்வர் மவுனம் காப்பது அநீதி” - அண்ணாமலை

அண்ணாமலை (இடது) அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (வலது) | கோப்புப்படம்

சென்னை: "உதயநிதி ஸ்டாலின், சபரீசன் முறைகேடாக 30,000 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ குறித்து இப்போது வரை திமுக அரசு எந்தவித விளக்கமும் அளிக்காமல் மவுனமாக இருப்பது, அவர்களுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகிய இருவர் ஒரே வருடத்தில் 30,000 கோடி ரூபாய் வரை முறைகேடாக சம்பாதித்துள்ளார்கள் என்று பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தோம். நாங்கள் இந்த மாதம் 14-ம் தேதி வெளியிட்ட DMK Files என்ற காணொளிக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது தமிழக நிதியமைச்சரின் பேச்சு.

இப்போது வரை அதற்கு, திமுக அரசு எந்தவித விளக்கமும் அளிக்காமல் மவுனமாக இருப்பது, அவர்களுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும்.

— K.Annamalai (@annamalai_k) April 20, 2023

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் ஒரு ISIS தற்கொலைப்படைத் தாக்குதல் என்பதை முதல் நாளிலிலிருந்து தமிழக பாரதிய ஜனதா கட்சி சொல்லி வந்ததை நேற்று மீண்டும் ஒருமுறை தேசிய புலனாய்வு முகமையின் குற்றப்பத்திரிகை உறுதிபடுத்தியுள்ளது. இதை இன்று வரை சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் என்று மக்களை ஏமாற்றி வருகிறது. திமுக, திமுகவினரின் ஆட்சி அதிகார மமதையால் தினந்தோறும் மக்கள் அவதிப்படுகின்றனர்.

ஒருபுறம் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மறுபுறம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் குடும்பம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரே வருடத்தில் 30,000 கோடி ரூபாய் முறைகேடாக சம்பாதித்திருப்பது என இந்த ஆட்சி கொடுத்த வாக்குறுதிகளுக்கு நேர் எதிராகவும் மக்கள் விரோதமாகவும் செயல்பட்டு வருவதை இனியும் அனுமதிக்க முடியாது. ஊழலில் கொழிக்கும் தனது குடும்பத்தாரின் இந்த செயலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று மக்களுக்கு பதில் அளிப்பதோடு தகுந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், செய்தியாளர் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஆடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆங்கில உரையாடலுக்கான தமிழ் மொழிபெயர்ப்பும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

அந்த மொழிபெயர்ப்பில், "உதயநிதியும், சபரீசனும் ஒரே வருடத்தில், அவர்களது மூதாதயரைவிட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். இப்போது அது பிரச்சினையாகி வருகிறது.
இதை எப்படி கையாள்வது? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது? 10 கோடி, 20 கோடி என சிறுக சிறுக குவித்தது, அது தோராயமாக 30,000 கோடி ரூபாய் இருக்கும்" என்று தெரிவிக்கப்படிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x