Published : 21 Apr 2023 02:42 PM
Last Updated : 21 Apr 2023 02:42 PM

தொழிலாளர்களின் விருப்ப அடிப்படையில்தான் ‘12 மணி வேலை நேர’ சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்: தமிழக அரசு

அமைச்சர் சி.வெ.கணேசன் | கோப்புப்படம்

சென்னை: "எந்தவொரு தொழிற்சாலையாக இருந்தாலும், நிறுவனமாக இருந்தாலும் அங்கு பணியாற்றக் கூடிய தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தொழிலாளர்களுக்கு விருப்பம் இல்லையென்றால், நிச்சயமாக அரசு பரிசீலனை செய்து, ஆய்வு செய்துதான் நடைமுறைப்படுத்தப்படும்" என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கூறியுள்ளார்.

தொழிலாளர்களின் 12 மணி வேலை நேர சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "வேலைநேர சட்டத் திருத்த மசோதா திருத்தி அமைக்கப்பட்டுள்ள 65-ஏ பிரிவின் கீழ், நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகள் கட்டுப்பாடுகளுடன், தொழிலாளர்கள் நலன் பாதிக்காத வகையில், தொழிலாளர்களின் ஒப்புதலுடன் மட்டுமே நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தச் சட்டத்திருத்தம் என்னவென்றால், எந்தவொரு தொழிற்சாலையாக இருந்தாலும், நிறுவனமாக இருந்தாலும் அங்கு பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தொழிலாளர்களுக்கு விருப்பம் இல்லையென்றால் நிச்சயமாக அரசு பரிசீலனை செய்து, ஆய்வு செய்துதான் நடைமுறைப்படுத்தப்படும்.

ஒரு வாரத்தில் 48 மணி நேரம் வேலை நேரம். அந்த நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதுதொடர்ந்து அப்படியேதான் இருக்கும். எல்லா நிறுவனங்களுக்கும் இந்தச் சட்டத் திருத்தம் பொருந்தாது. எந்த நிறுவனம், எந்த தொழிற்சாலை விரும்புகிறதோ, அந்த தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே, இந்த சட்டம் பொருந்தும்" என்று அவர் கூறினார்.

அப்போது இந்தச் சட்டத் திருத்தம் குறித்து, தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் ஏதாவது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "அதாவது இது தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டத் திருத்தம் அல்ல. எந்தவொரு தொழிலாளர்களின் விருப்பத்திற்கு மாறாகவோ, எதிர்ப்பான சட்டத் திருத்தம் அல்ல. வாரத்துக்கு 48 மணி நேரம் பணி என்பது மட்டுமே நீடிக்கும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. விரும்புகிற நிறுவனங்களுக்கு அரசு பரசீலித்துதான் முடிவெடுக்குமே தவிர, அனைத்து நிறுவனங்களுக்கும் இது நடைமுறைப்படுத்தப்படமாட்டாது" என்றார்.

மேலும், எந்தவொரு தொழிலாளர்களின் எதிர்ப்பை மீறியோ, கட்டாயப்படுத்தியோ இந்தச் சட்டம் நிச்சயமாக நடைமுறைப்படுத்தப்படாது. எந்த தொழிற்சாலை விரும்புகிறதோ, அந்தத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களின் விருப்பத்தில் அடிப்படையில்தான் நடைமுறைப்படுத்தப்படும்" என்று அவர் கூறினார். | வாசிக்க > வாசிக்க > 12 மணி வேலை நேர மசோதா: திமுக கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி பேரவையில் நிறைவேற்றம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x