Published : 21 Apr 2023 02:18 PM
Last Updated : 21 Apr 2023 02:18 PM
கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அருகே உரம் ஏற்றி சென்ற சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதால், அவ்வழியே பயணிகள் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து உரம் ஏற்றிக் கொண்டு 100 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் பெங்களூர் நோக்கி நேற்று (20-ம் தேதி ) மாலை புறப்பட்டது. இந்த ரயிலை லோகோ பைல்ட் சர்மா ஓட்டி வந்தார். காப்பாளர் குஞ்சன்குமார் உடன் வந்தார். ரயில் திருச்சி, சேலம், தருமபுரி வழியாக பெங்களூரு செல்வதாக இருந்தது. ரயிலில் இருந்த 41 பெட்டிகளில் 21 பெட்டிகள் உரமும், மீதமுள்ள 21 பெட்டிகளில் காலியாக இருந்தன. இந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உடையாண்டஅள்ளி பக்கமாக வந்தபோது திடீரென்று 6 பெட்டிகள் தடம் புரண்டன. ரயிலின் 3-வது பெட்டி முதல் 8-வது பெட்டி வரையில் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.
அதிர்ச்சியடைந்த ஓட்டுநர்கள், உடனடியாக ரயில்வே அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சேலம், தருமபுரி, பெங்களூரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட, ரயில் பணியாளர்கள் நிகழ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முன்னதாக, ரயில் இன்ஜினில் இருந்து 2 பெட்டிகள் கழற்றப்பட்டு, ராயக்கோட்டை மார்க்கமாக அனுப்பி வைக்கப்பட்டன.
தண்டவாளத்தில் இருந்து இறங்கிய 6 பெட்டிகள் தவிர, மற்ற பெட்டிகள் கழற்றி மாரண்டஅள்ளி வழியாக சேலம் மார்க்கம் திருப்பி அனுப்பப்பட்டது. தடம் புரண்ட 6 பெட்டிகளில் இருந்து உரம் மூட்டைகள் கீழே இறக்கி வைக்கப்பட்டன. நிகழ்விடத்தில் ரயில் பைலட் சர்மா, காப்பாளர் குஞ்சன்குமார், ரயில்வே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜூ, செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் கிரேன் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மாற்றுப் பாதையில் ரயில்கள் இயக்கம்: இது தொடர்பாக தென்மேற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- சரக்கு ரயில் மாரண்டஅள்ளி - ராயக்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே அதிகாலையில் தடம் புரண்டது.
தருமபுரி - ஓசூர் ரயில்வே இருப்பு பாதையில் தென்மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட பெங்களூரு கோட்டத்தில் அதிகாலையில் நடந்த விபத்தால், அவ்வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில்கள் நிறுத்தப்பட்டு, மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. அதன்படி சேலம் - யஸ்வந்த்பூர் ரயில் (16212) நிறுத்தப்பட்டுள்ளது.
கோவை - லோக்மானியா திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு குப்பம், பங்காருப்பேட்டை, மாலூர், கிருஷ்ணராஜபுரம் வழியாக மாற்று பாதையில் இயக்கப்படுகிறது. இதே போல், கோவை - லோக்மானியா திலக்ஸ் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் (11014) சேலத்தில் இருந்து குப்பம், பங்காருபேட்டை, மாலூர், கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூருவுக்கு செல்கிறது.
மேலும், பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (12677) பெங்களூருவில் இருந்து சேலததிற்கு திருப்பத்தூர் வழியாகவும், பெங்களூரு - காரைக்கால் ரயில் (16529) திருப்பத்தூர் வழியாக செல்கிறது. தொடர்ந்து, நாகர்கோவில் - பெங்களூரு ரயில் (17236) சேலத்தில் இருந்து திருப்பத்தூர், ஜோலார் பேட்டை கிருஷ்ணராஜபுரம் வழியாக செல்கிறது. இந்த ரயில்கள் தருமபுரி, ஓசூர் ரயில் நிலையங்களுக்கு செல்லாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சரக்கு ரயில் தடம்புரண்டதால் தருமபுரி, ஓசூர் ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டதால், நாள்தோறும் பெங்களூர் நகருக்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment