Published : 21 Apr 2023 01:40 PM
Last Updated : 21 Apr 2023 01:40 PM
சென்னை: 12 மணி நேர வேலை மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டது.
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் பேசுகையில், "வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்; இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5-வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது; அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை; விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்படும்" என்று தெரிவித்தார். | அவரது விரிவான விளக்கம் > தொழிலாளர்களின் விருப்ப அடிப்படையில்தான் ‘12 மணி வேலை நேர’ சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்: தமிழக அரசு
வெளிநடப்பும் எதிர்வினையும்: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி வேலை நேர மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:
விசிக உறுப்பினர் சிந்தனைசெல்வன்: “ஆலை முதலாளிகளுக்கான சட்டமாக இது உள்ளது. அனைத்து கூட்டணிக் கட்சிகளும் எதிர்த்து குரல் கொடுத்தோம். யார் மீதும் திணிக்கப்படாது என்கிறார்கள். ஆனால் உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும்.”
சிபிஎம் எம்எல்ஏ நாகை மாலி: “கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவான சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியிருக்கிறது. தொழிற்சங்க உரிமையை நசுக்கும் சட்டம் பற்றி காலையிலேயே முதல்வரை சந்தித்து பேசினோம். முதல்வர் உறுதியளித்த பின்னரும் நிறைவேற்றப்பட்டுள்ளது.”
சிபிஐ எம்எல்ஏ தளி ராமச்சந்திரன்: “நூற்றாண்டு காலமாக போராடி பெற்ற சம்பள உயர்வு, நிரந்தர வேலை எல்லாவற்றையும் நீர்த்துப் போகும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதை எதிர்த்து வெளிநடப்பு செய்தோம்.”
இதனிடையே, "மின்னணுவியல் துறை, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி, மென்பொருள் துறையில் பணியாற்றக் கூடியவர்களுக்கு 12 மணி நேர வேலை மசோதா பொருந்தும் வாய்ப்புள்ளது" என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். | அதன் முழு விவரம்: 4 நாள் வேலை, 3 நாள் ஓய்வு... 12 மணி நேர வேலை மசோதா யாருக்கெல்லாம் பொருந்தும்? - அமைச்சர் விளக்கம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT