சென்னை: சென்னையில் 3 ஆயிரம் சிசிடிவி கேமரா அமைக்கப்படும், ரிமோட் மூலம் விலங்கிடும் கருவி வாங்கப்படும் போன்ற புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் நேற்று முதல் காவல்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதன்படி, நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ஆருத்ரா நிதி நிறுவன மோசடி, வேங்கைவயல் விவகாரம், பல்வீர் சிங் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று (ஏப்.21) காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். இதனைத் தொடர்ந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிவிப்புகளின் விவரம்:
- விழுப்புரம் மேல்மலையனூர், உள்ளிட்ட 5 இடங்களில் புதிய தாலுக்கா காவல்நிலையங்கள் அமைக்கப்படும்.
- தாம்பரம் மாநகருக்கு உட்பட்ட பெரும்பாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட காவல்நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்
- பெண் காவலர்களுக்காக சென்னை சிந்தாதிரிபேட்டையில் மகளிர் காவல் விடுதி கட்டப்படும்.
- ஆண்டுதோறும் காவலர்களுக்கு சீருடைப்படி ரூ.4,500 வழங்கப்படும்.
- காவலர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை ரூ.30,000 ஆக உயர்த்தப்படுகிறது.
- சென்னையில் 3 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும்.
- நெல்லை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் ரூ. 10.15 கோடி மதிப்பில் புதிதாக மரபணு ஆய்வுப்பிரிவு உருவாக்கப்படும்
- குற்றவாளிகளை கைது செய்யும் போது பலத்தை பிரயோகிக்காமல் பாதுகாப்பாகவும் சட்ட ரீதியாகவும் அவர்களை கட்டுப்படுத்த ரிமோட் மூலம் விலங்கிடும் Remote Restraint Wrap கருவிகள் 25 வாங்கப்படும்.
- காஞ்சிபுரம், திருச்சி, நெல்லை உட்பட 4 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்கப்படும்
- க்ரிப்டோ கரன்சி மோசடிகளை கண்டுபிடிக்க செயின் பகுப்பாய்வு ரியாக்டர் (Chain Analysis Reactor Tool) கருவி வாங்கப்படும். க்ரிப்டோ கரன்சியின் மூலத்தையும், சேரும் இடத்தையும் கண்டுபிடிக்க இக்கருவி பயன்படும்
WRITE A COMMENT