Published : 21 Apr 2023 04:42 AM
Last Updated : 21 Apr 2023 04:42 AM

கட்சி உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் அதிமுக பொதுக்குழுவுக்கு கிடையாது: ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வாதம்

சென்னை: அதிமுகவில் உறுப்பினர்களைக் கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம், உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கே கிடையாது என ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று தொடங்கியது.

அப்போது ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன் மற்றும் குரு கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டதாவது:

கடந்த ஆண்டு ஜூலை 11-ல் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானமாக, ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியில் இருந்து நீக்கும் முன்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை. 3 முறை முதல்வராக பதவி வகித்த ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கியதில் கட்சியின் சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை.

கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கே, கட்சியின் உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் கிடையாது. உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்துதான் ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதற்காக கட்சியில் இருந்து எப்படி நீக்க முடியும்?

வாய்ப்பே கொடுக்கவில்லை: பொதுச் செயலாளர் பதவிக்கு இபிஎஸ்-க்கு எதிராக போட்டியிட அனைத்து தகுதியும் உள்ள ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து தந்திரமாக நீக்கிவிட்டு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தியிருப்பதைத்தான் எதிர்க்கிறோம். ஓபிஎஸ் போட்டியிடத் தயார் என அறிவித்தபிறகு, அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் இபிஎஸ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துக் கொண்டனர்.

கட்சியில் இருந்து நீக்கியதாலும், பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனதாலும் ஓபிஎஸ்-க்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பை கட்சியில் இருந்து நீக்கியது கட்சியின் சட்டவிதிகளுக்கு முரணானது என்பதை தனி நீதிபதியும் ஒப்புக்கொண்டுள்ளார்.

எம்ஜிஆரின் நோக்கம்: கட்சியின் நிறுவனரான எம்ஜிஆரின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் தீர்மானங்கள் செல்லும் என தனி நீதிபதி மேலோட்டமாக தீர்ப்பளித்துள்ளார். பொதுக்குழுவில் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக இபிஎஸ் தரப்பு வாதிடுகிறது. ஒன்றரை கோடி உறுப்பினர்கள் கொண்ட மிகப்பெரிய கட்சியில் 2 ஆயிரம் பேர் கொண்ட பொதுக்குழுவே கட்சியாகி விடாது. அதன் அடிப்படையில் முடிவுகளை எடுத்துவிடக் கூடாது என்பதுதான் அதிமுகவுக்கான விதிகளை உருவாக்கிய எம்ஜிஆரின் நோக்கம்.

ஆனால், அந்த விதிகளை தங்களுக்கு சாதகமாக மாற்றியிருப்பது கட்சியின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா, இல்லையா என்பதை இந்த நீதிமன்றம் இன்னும் முடிவெடுக்கவில்லை.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் குறித்து பிரதான வழக்கில்தான் தீர்மானிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தீர்மானங்கள் செல்லும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவையே தனிநீதிபதி தனது உத்தரவில் மேற்கோள் காட்டியிருப்பது ஏற்புடையதல்ல, இவ்வாறு வாதிட்டனர். அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை ஓபிஎஸ் தரப்பின் தொடர் வாதத்துக்காக இன்றைக்கு தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x