Published : 10 Sep 2017 02:42 PM
Last Updated : 10 Sep 2017 02:42 PM
ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை விகிதத்தில் அசுரப் பாய்ச்சலோடு துள்ளிச் செல்கிறது கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தாமொழியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி.
‘‘சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை. அனைவருக்கும் கல்வியும், உழைப்பும் போதுமானது” என காமராஜரின் பொன்மொழிகள் தலைமை ஆசிரியரின் அறையில் உள்ள கரும்பலகையில் வரவேற்க, அதை மனதிலும் உரமேற்றி களப்பணி செய்ததால் பல சாதனைகளை ஓசையின்றி செய்துள்ளது இப்பள்ளி. தொடக்கத்தில் ஈத்தாமொழி அரசு மேல்நிலைப் பள்ளியோடுதான் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலும் இருந்தது. 2008-ல் ஈத்தாமொழி தொடக்கப் பள்ளி இங்கு தனிக் கட்டிடத்தில் மலர்ந்தது. சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள், கிராமக் கல்விக் குழு, பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் என பலரும் சேர்ந்து இப்பள்ளிக்குத் தேவையான 28 சென்ட் இடம் வாங்கிக் கொடுத்தனர். உள்ளூர் மக்களின் பங்களிப்பு, இப்பள்ளிக்கு கிடைத்த வரப்பிரசாதமாக திகழ்கிறது.
பள்ளி வளர்ச்சி குறித்து தலைமை ஆசிரியர் விமலா மேரி கூறியதாவது:
இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த பள்ளிக்கு வந்தபோது, 131 மாணவ, மாணவிகள் படித்தனர். இப்போது 241 பேர் படிக்கின்றனர். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமானால் முதலில் பெற்றோருக்கு எங்கள் மீது நம்பிக்கை வர வேண்டும். அதற்கான விதையைத்தான் முதலில் விதைத்தோம்.
ஈத்தாமொழியில் இருந்து பறக்கை வரை உள்ள பல குக்கிராமங்களுக்கு ராஜாக்கமங்கலம் உதவித் தொடக்க கல்வி அலுவலர் கிரீச சந்திரன் தலைமையில் வேனில் சென்று வாகனப் பிரச்சாரம் செய்தோம். வீடு வீடாகப் போய் துண்டுப் பிரசுரம் விநியோகித்தோம். ஒவ்வொரு ஊரிலும் இதுகுறித்து அறிவிப்பு பதாகை வைத்தோம். பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதில் இன்னொரு காரணமும் உள்ளது. வீட்டு முன்பு இருந்து வேனில் பிள்ளைகளை அழைத்து சென்று, வீட்டின் முன்பே கொண்டுவந்து விடுவார்கள். இந்த வசதியின்மையால் எங்கள் பள்ளியில் சேர்க்கை விகிதம் குறைகிறது என்பதை அறிந்தோம்.
ஆட்டோ வசதி
இந்தக் குறைபாட்டை சரிசெய்வது பற்றி பள்ளி மேலாண்மை குழு, கிராம கல்விக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரோடு விவாதித்தோம். அனைவரது ஒத்துழைப்போடு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவரும் வகையில் ஆட்டோ வசதி ஏற்படுத்தினோம். நாம் இதுபோல எத்தனை வசதிகளை ஏற்படுத்தினாலும்கூட, தனியார் பள்ளியில் படிக்கும் பக்கத்து வீட்டுக் குழந்தையோடு அரசுப் பள்ளியில் படிக்கும் தம் பிள்ளைகளை பெற்றோர் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் சிறப்பாகப் படிக்கிறார்கள் என்பது தெரிந்தால்தான் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாகும்.
பன்மொழி திறன் பயிற்சி
ஆகவே, அடிப்படை வசதிகளை அதிகப்படுத்தும் அதே நேரத்தில், மாணவர்களின் கற்றல் திறன்களை அதிகப் படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம். படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுக்கிறோம். பன்மொழித் திறன் வளர்க்க இந்தி, ஆங்கில உரையாடல் பயிற்சிகள் அளிக்கிறோம். பரதநாட்டிய வகுப்பும் நடத்துகிறோம்.
இவ்வாறு தலைமை ஆசிரியர் கூறினார்.
இப்பள்ளி 4 ஆண்டுகளுக்கு முன்பே முழுக்க ஆங்கிலவழிப் பள்ளியாக மாற்றப்பட்டது. ஆங்கில வழியில் முதல் பிரிவினர் இப்போது 5-ம் வகுப்பு படிக்கின்றனர். பள்ளிக் குழந்தைகளின் ஆங்கில உரையாடலையும், ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிப்பதையும் பார்த்தால் பள்ளியின் கல்வித் தரத்தை அறிந்துகொள்ளலாம்.
தனியார் ஆங்கிலப் பள்ளிகள்போல அடையாள அட்டை, பெல்ட், டை என மாணவர்கள் தூய்மையாக பளிச்சிடுகின்றனர். ஆண், பெண் குழந்தைகளுக்கென தனித்தனியே கழிப்பறை வசதியும் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறது. சாப்பிட்டுவிட்டு குழந்தைகள் கைகழுவும் இடத்திலும் சாப்பிடும் முன்னும், பின்னும் கழுவுவதற்கு வசதியாக சோப்பு, கை கழுவும் ஹேண்ட் வாஷ் வைக்கப்பட்டுள்ளன.
பாரத மாதா, தமிழ்த்தாய், தேசிய மலர், தேசிய பறவை, தேசிய விலங்கு என வண்ண, வண்ண ஓவியங்களால் பள்ளிச் சுவர்கள் பளிச்சிடுகின்றன. அறிவியல் மாதிரிகள் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு சர் ஐசக் நியூட்டன், ஆல்பிரட் நோபல், ஐன்ஸ்டீன், சி.வி. ராமன், தாமஸ் ஆல்வா எடிசன் என அறிவியலாளர்களின் படங்கள் சுவரை அலங்கரிக்கின்றன.
பள்ளி வளாகத்தில் மூலிகைத் தோட்டமும் போடப்பட்டுள்ளது. இதில் துளசி, பிரண்டை, வல்லாரை, நொச்சி, சுண்டைக்காய் என பாட்டி வைத்திய மூலிகைகள் அணிவகுக்கின்றன. தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு மகிழ்வூட்டும் சீசா, சறுக்கு, டயர் ஏற்றம் ஆகியவையும் உள்ளன. குழந்தைகளிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகை யில் சிறுசேமிப்பு திட்டமும் செயல்படுத்தப் படுகிறது.
பள்ளியில் உள்ள கணினிகள், நூலகத்தை மாணவர்கள் முழுமையாக பயன் படுத்துகின்றனர்.
வானொலியில் அசத்தல்
நாகர்கோவில் அகில இந்திய வானொலியில் இப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் குரல்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன.
வானொலியில் ஒலிபரப்பாகும் சிறுவர் பூங்கா, மழலையர் பூங்கா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இப்பள்ளி மாணவர்கள் தொடர் பங்களிப்பு செய்து வருகின்றனர்.
இத்தகைய செயல்பாடுகளால் 2014-ல் ராஜாக்கமங்கலம் வட்டாரத்தில் சிறந்த பள்ளி எனவும், 2016-ல் குமரி மாவட்டத்திலேயே சிறந்த தொடக்கப்பள்ளி எனவும் இப்பள்ளி தேர்வு செய்யப்பட்டதாக தலைமை ஆசிரியர் பெருமையோடு கூறுகிறார்.
மாநில அளவில் சிறந்ததாக இப்பள்ளியை உயர்த்த வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்றும் கூறுகிறார்.
தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 94433 12514.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT