Published : 21 Apr 2023 05:28 AM
Last Updated : 21 Apr 2023 05:28 AM
சென்னை: சட்டப்பேரவையில் நிதித் துறை, பணியாளர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அத்துறையின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
அரசு பணியாளர் தேர்வு, பணித்திறன் மேம்பாடு மற்றும் பணியாளர் மேலாண்மை குறித்த அறிக்கை வெளியிடப்படும். டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு புதிய உயர்தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் ஒரேதேர்வுக்கு 25 ஆயிரம் முதல் 25 லட்சம் வரையிலான தேர்வர்கள் எழுதுகின்றனர். இவ்வாறு எழுதப்படும் தேர்வுகளில் திருத்தப்படும் பாடவாரியான விடைத்தாள்களின் எண்ணிக்கையும் பல மடங்கு ஆகும்.அகில இந்திய அளவில் நடத்தப்படும் பல்வேறு போட்டிகளில் கொள்குறிவகை (அப்ஜெக்டிவ் டைப்) தேர்வுகள் பற்றிய வழிமுறைகளை ஆராய்ந்து, காலதாமதத்தை தவிர்க்க, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
அரசு பணியாளர்களின் திறனைமேம்படுத்த ஓர் ஆய்வு மேற்கொள்ளப்படும். வெவ்வேறு துறைகளால் வழங்கப்படும் நலத்திட்டங்களின் பயனாளிகள் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தரவு தளம் உருவாக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT