Published : 21 Apr 2023 06:33 AM
Last Updated : 21 Apr 2023 06:33 AM
சென்னை: சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநருக்குப் பதிலாக அரசே நியமிக்கும் வகையில் ஏற்கெனவே பேரவையில் சட்டத்திருத்த மசோதக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், மீன்வளப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதேபோல, கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு அளிப்பது தொடர்பான சட்டத்திருத்த மசோதாவை, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று தாக்கல் செய்தார்.
மேலும், நகராட்சி நிர்வாக துறைசார்பில், நகராட்சிகள், மாநகராட்சி,பேரூராட்சி பகுதிகளில் நிலங்கள், கட்டிடங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் நிலத்தின்மீதுள்ள அல்லது இணைக்கப்பட்டுள்ள சேமிப்புக் கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது ஆண்டு மதிப்பில் 5 சதவீதத்துக்கு மிகாமல், மன்றத்தால் நிர்ணயிக்கப்படும் விகிதத்தில் கல்வி வரியை நிர்ணயிக்கலாம் என்பதற்கான தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கே.என்.நேரு அறிமுகம் செய்தார்.
அதேபோல, தமிழகத்தில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் அறிவிப்பைஇணையதளம் வாயிலாக வெளியிடப்படுவதுடன், தினசரி செய்தித்தாள்களிலும், இந்திய வர்த்தக இதழிலும் வெளியிடும் வகையில், தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
இதுதவிர, வரும் 2025-26-ம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறையை நீக்கும் வகையில், குறிக்கப்பட்ட காலவரம்பை நீட்டிக்கவும், 2025 மார்ச் 31-ம் தேதிக்குள் மாநில உள்நாட்டு உற்பத்தியின் நிதிப் பற்றாக்குறையை 3 சதவீதம்வரை குறைக்கவும், தமிழ்நாடுநிதிநிலை நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இரு மசோதாக்களையும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாக்கள் இன்று பிற்பகல் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT