Published : 21 Apr 2023 06:45 AM
Last Updated : 21 Apr 2023 06:45 AM
சென்னை: சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீது எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி பேசினார். அவரது கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனுக்குடன் பதில் அளித்தார். அதிமுக, திமுக ஆட்சியில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்து இருவரும் பட்டியலிட்டனர். இதனால் ஏற்பட்ட காரசார விவாதத்தால் பேரவையில் அவ்வப்போது அதிமுக, திமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இந்த விவாதம் வருமாறு:
எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி: கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது. ஜல்லிக்கட்டு, கோயில்திருவிழாக்கள், தேவர் ஜெயந்திஉள்ளிட்ட நிகழ்வுகள் அமைதியாகவும், சுமுகமாகவும் நடந்தன. மாநிலம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. மக்கள் விரும்பி வந்து வாழும் மாநிலமாக தமிழகத்தை திமுக ஆட்சி மாற்றியுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் பல கோரிக்கைகளை வைத்ததுடன், பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார். அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தெரிந்தவுடன் பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது குற்றவழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்மட்ட குழு விசாரணைஅதிகாரி அமுதா அளித்த இடைக்கால அறிக்கை அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று நாங்கள் சொல்லவில்லை. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்களை எங்களாலும் பட்டியல் போட முடியும். குறிப்பாக சென்னைஉயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமிக்கு எதிராக நீங்கள் நடத்தியவன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகளை மக்கள் மறக்கமாட்டார்கள்.
எதிர்கட்சித் தலைவர்: ஸ்டெர்லைட் ஆலை சம்பவம் நடந்தபோது நான் ஆய்வுக்கூட்டத்தில் இருந்தேன். அந்த கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்கள் கேட்டபோது தொலைக்காட்சியில் பார்த்தேன் என்று சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை ரூ.1,500 கோடியில் விரிவாக்கம் செய்யப்படும் என்று திமுக ஆட்சியில் அறிவித்ததாலேயே இப்போராட்டம் நடைபெற்றது. அதனால் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தோம்.
முதல்வர் ஸ்டாலின்: 100 நாட்கள் போராட்டம் நடந்தது. முதல்வரோ, அமைச்சரோ ஏன் போராட்டக்காரர்களை அழைத்துப் பேசவில்லை. தடை செய்யப்பட்ட பகுதிக்கு திமுக எம்எல்ஏ செல்லவில்லை. இந்த பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம்.
எதிர்கட்சித் தலைவர்: இப்போராட்டம் தொடர்பாக 14 முறை பேச்சுவார்த்தை நடந்தது. ஆலையை விரிவாக்கம் செய்யப்போவதாக அறிவித்த பிறகே போராட்டம் தீவிரமடைந்தது. இருப்பினும் துப்பாக்கி சூடு சம்பவத்துக்குப் பிறகு அதிமுக ஆட்சியில்தான் ஆலை மூடப்பட்டது.
முதல்வர்: கோடநாடு வழக்கு என்ன ஆனது? நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த வழக்கில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எதிர்கட்சித் தலைவர்: இந்த வழக்கில் திமுகவைச் சேர்ந்தவர்தான் ஜாமீன்தாரர். அவர் மீது நடவடிக்கை எடுத்தீர்களா? இதுதொடர்பாக நாங்கள் வழக்கு தொடர உள்ளோம். இவ்வழக்கில் 800 பக்க அறிக்கை தாக்கல் செய்து 90 சதவீத விசாரணை முடிந்துள்ள நிலையில், ஏன் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றினீர்கள்? நேர்மையாக அரசு நடத்தினோம். எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமும் இல்லை. தமிழகத்தில் பணம், நகைகளை குறிவைத்து முதியோர்கள் தாக்கப்படுகிறார்கள். கொலையும் செய்யப்படுகின்றனர். இதைத் தடுக்க தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க வேண்டும்.
முதல்வர்: கோடநாடு வழக்கில் நீங்கள் மெத்தனம் காட்டியதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிச்சயமாக உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுத்தருவோம். எந்தப் பிரச்சினையாகஇருந்தாலும் ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். தவறு செய்த திமுகவினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆதாரம் இல்லாமல் எதிர்கட்சித் தலைவர் தெரிவிக்கும் தகவல்கள் அவைக் குறிப்பில் இடம்பெறுவது முறையல்ல.
குட்கா வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக முன்னாள் டிஜிபி., காவல் ஆணையர் மீது சிபிஐ வழக் குப் பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நீங்கள் போதைப் பொருள் மாநிலமாக விட்டுச் சென்றீர்கள். நாங்கள் அதை சரிசெய்து வருகிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT