Published : 14 Sep 2017 02:23 PM
Last Updated : 14 Sep 2017 02:23 PM
ஜிஎஸ்டி வரி விதிப்பால் சேலம் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி தொழில் 60 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜவுளியின் விலை ஏற்றம் காரணமாக விற்பனையும் மந்தம் அடைந்துள்ளது.
சேலத்தில் இரும்பு, வெள்ளி, மரவள்ளி, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு தொழில் வளம் மிகுந்த மாவட்டமாக விளங்குகிறது. ஜவுளி உற்பத்தியின் கேந்திரமாக விளங்கும் சேலம் மாவட்டத்தில் 30 ஆயிரம் விசைத்தறி கூடங்களும், 10 ஆயிரம் கைத்தறி கூடங்களும் உள்ளன.
சேலத்தில் கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, குகை, அம்மாப்பேட்டை, சிவதாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், மாவட்டத்தில் ஓமலூர், மேச்சேரி, சிந்தமாணியூர், ஜலகண்டாபுரம், பஞ்சுகாளிப்பட்டி, வனவாசி, நங்கவள்ளி உள்ளிட்ட இடங்கள் விசைத்தறி, கைத்தறி தொழிலில் பிரதானமாக உள்ளன. இத்தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாக 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
வேதனையில் தொழிலாளர்கள்
கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி அறிமுகம் செய்த பின்னர் விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்கள் பணி வாய்ப்பு குறைந்து, தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாத வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து சேலம் கொண்டலாம்பட்டி பட்டு கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பலராமன் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் கைத்தறி மற்றும் விசைத்தறி மூலமாக பட்டுச் சேலைகள், காட்டன் துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் பட்டுச் சேலைகள் மாநிலம் முழுவதும் விற்பனைக்கு செல்வதோடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கின்றன.
தினம் 50 ஆயிரம் பட்டுச் சேலைகள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பால், ஜவுளி உற்பத்தி தொழில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 60 சதவீதம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து குறைந்த அளவு பட்டு புழுக்கள் மத்திய பட்டு வாரியத்துக்கு கிடைக்கிறது.
இதனால், பற்றாக்குறை தோற்றம் ஏற்பட்டு பட்டு புழுக்களின் விலை அதிகரித்துள்ளது.
நூல் விலை உயர்வு
ஒரு கிலோ பட்டு நூல் ரூ.3,200-க்கு விற்ற நிலையில் தற் போது, ரூ.4,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாவு நூல் ஒரு கிலோ ரூ.4,100 விற்பனையானது, தற்போது ரூ.5,100 ஆக விற்பனையாகிறது. நூல் விலை உயர்வு ஒரு புறம் என்றால், பல அடுக்குகளாக விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி கைத்தறி, விசைத்தறி தொழிலை மிரட்டுகிறது.
சேலை டுவிஸ்ட், வார்பிஸ், பட்டு கோன் பிடிக்க, பார்ஸிங் செய்ய, நெய்வதற்கு கூலி என தலா 5 சதவீதமும், டையிங் செய்ய 18 சதவீத வரி விதிப்பு என ஒரு பட்டுச் சேலை தயாரித்து விற்பனைக்கு வரும் போது, வழக்கத்தை விட ஆயிரம் ரூபாய் விலை ஏற்றம் கண்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள தொழில் ரீதியான விலை ஏற்றத்தால் விற் பனையில் மந்தநிலையை ஏற்பட்டுள்ளது.
எனவே, இத்தொழிலில் நலிவைப் போக்கிட ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து கைத்தறி, விசைத்தறிக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT