Published : 18 Sep 2017 01:40 PM
Last Updated : 18 Sep 2017 01:40 PM
இனப் பெருக்க காலம் முடிந்ததால், மேற்குத் தொடர்ச்சி மலைக்கு வண்ணத்துப் பூச்சிகள் கூட்டம், கூட்டமாக திரும்பிச் செல்லத் தொடங்கி விட்டன.
விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் சாம்பல்நிற அணில்கள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், மிளா, காட்டுப் பன்றி, செந்நாய், கரடி, யானை, சிங்கவால் குரங்கு, வரையாடு, சாம்பல் நிற அணில் என 32 வகையான பாலூட்டிகளும், கிரேட் இந்தியன் ஹார்ன் பில், ஸ்ரீலங்கன் பிராக் மவுத், மலபார் விசிலிங் திரஸ், ஜங்கிள் பவுல் மற்றும் ஹார்ன் அவுள் போன்ற 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்களும், 53 வகையான ஊர்வன இனங்களும், நிலத்திலும், நீரிலும் வாழக் கூடிய 24 வகையான உயிரினங்களும், 200-க்கும் மேற்பட்ட வண்ணத்துப் பூச்சி இனங்களும் பல்வேறு அரிய தாவர வகைகளும் காணப்படுகின்றன.
மிதமான மழையால் இதமான சூழல்
கடந்த ஜூலை மாதத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும், அதனை ஒட்டியுள்ள வனப் பகுதிகளிலும் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருவதால் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் ஏற்ற சூழல் உருவானது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் காணப்பட்டன.
மலை உச்சியிலும், அடர்ந்த காடுகளிலும், குளிர் பிரதேசங்களிலும் மட்டும் காணப்படும் அரியவகை வண்ணத்துப் பூச்சியினங்கள் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார் கோயில் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்தன.
இனப் பெருக்கம்
மார்ச், ஏப்ரல் மாதங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டும் காணப்படும் கொன்னை வெள்ளையன், கொக்கிக்குறி வெள்ளையன், பருபலா வெள்ளையன், வெண்புள்ளிக் கருப்பன், வெந்தைய வரியன், எழுமிச்சை அழகி, கத்திவால் அழகி போன்ற வண்ணத்துப் பூச்சி வகைகள் மலையிலிருந்து அடிவாரப் பகுதிக்கு பல ஆயிரக் கணக்கில் இடம்பெயர்ந்தன. முட்டையிட்டு குஞ்சு பொறித்தபின்னர் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இவை மீண்டும் வனப் பகுதிக்குள் இடம் பெயர்வது வழக்கம்.
அடர்ந்த காடுகள், உயர்ந்த மலைகள், குளிர் பிரதேசங்களில் மட்டுமே காணப்படும் காமன் இம்பீரியல், சில்வர்ஸ்டிக் புளூ, பாரோனெட் போன்ற அரிய வகை வண்ணத்துப் பூச்சிகளும் ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார்கோயில் பகுதியில் ஏராளமாகக் காணப்பட்டன. அய்யனார் கோயில் பகுதியில் இதுபோன்ற வண்ணத்துப் பூச்சியினங்கள் தென்படுவது இதுவே முதல்முறை என்பதும், இவ்வகை வண்ணத்துப் பூச்சிகள் அதிக எண்ணிக்கையிலும் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
வண்ணத்துப் பூச்சிகளின் வருகையால் பறவைகள் ஆர்வலர்களும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கில் கூட்டமாகப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளைப் பார்க்க ஏராளமானோர் அய்யனார் கோயில் பகுதிக்குச் சென்று வருகின்றனர்.
இனப்பெருக்க காலம் முடிவதால் வண்ணத்துப் பூச்சிகள் தற்போது மீண்டும் மேற்குத் தொடர்ச்சிமலை பகுதிகளுக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT