Published : 20 Apr 2023 10:48 PM
Last Updated : 20 Apr 2023 10:48 PM

ஆருத்ரா முதல் வேங்கைவயல் வரை - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நிலவர அப்டேட்

தமிழக சட்டப்பேரைவயில் பதிலுரை ஆற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் ஆருத்ரா நிறுவன மோசடி, வேங்கைவயல், பல்வீர் சிங் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

பல்வீர் சிங் வழக்கு: கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஏஎஸ்பி பல்வீர் சிங் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது, 17.04.2023 அன்று குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட அமுதா ஐஏஎஸ், 4 நாட்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் முகாமிட்டு நடத்திய விசாரணையின் அடிப்படையில், சிசிடிவி கேமராக்களில் எல்லாம் பதிவாகியிருக்கிற அந்த ஆதாரங்களை எல்லாம் அடிப்படையாக வைத்து நேற்றைய தினம் ஓர் இடைக்கால அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்திருக்கிறார்.

அவரது அறிக்கையின் அடிப்படையில்தான், நேற்றிரவு சிபிசிஐடி விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். | வாசிக்க > பல்வீர் சிங் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியது ஏன்?

கஞ்சா வழக்குகள்: கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்திருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "போதைப்பொருட்களின் பிடியில் இந்த ஆட்சியை விட்டுச்சென்றதே உங்களது ஆட்சியில்தான். இந்த அரசு ஆட்சி பொறுப்பேற்றப் பிறகு, போதைப்பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க பல தீவிர நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கிறோம்.

2022ல் தான், கடந்த 6 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதுவும் திமுக ஆட்சியில்தான். அதேபோல் இந்த சட்டத்தின்கீழ் 2020 அதிமுக ஆட்சியில் 15 ஆயிரத்து 313 கிலோ கஞ்சாவும், 1 கிலோ 896 கிராம் ஹெராயினும், 527 வாகனங்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் 2022ல் மட்டும், 27 ஆயிரத்து 140 கிலோ கஞ்சா, 22 கிலோ 58 கிராம் ஹெராயின், 1242 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் போதைப்பொருட்கள் விற்பனைச் செய்பவர்கள், விநியோகிப்பவர்களின் 5723 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். | வாசிக்க > 2022-ல் மட்டும் 27,140 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆருத்ரா வழக்கு: ஆரூத்ரா நிதி நிறுவன முறைகேடுகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற மேனேஜிங் டைரக்டர் ராஜசேகர் மற்றும் உஷா ராஜசேகர் ஆகியோரை கைது செய்ய ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட எதிரிகள் மீது Look Out Circular வழங்கப்பட்டுள்ளது. ரொக்கம், வங்கிக் கணக்குகளில் இருந்த பணம் சுமார் 96 கோடி ரூபாய், 93 அசையா சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

இதேபோல், Hijau, IFS, Elfin, CVRS Chits, Rahat உள்ளிட்ட நிதி நிறுவனங்களும் மோசடியில் ஈடுபட்டுள்ளதால், அந்த நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கையை இந்த ஆட்சி எடுத்து இருக்கிறது. குற்றவாளிகளை கைது செய்து, அவர்களுடைய சொத்துகள் முடக்கம், வங்கிக் கணக்குகள் முடக்கம், உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு நான் உத்தரவிட்டிருக்கிறேன் என்று பதிலளித்தார். | வாசிக்க > ஆரூத்ரா உள்ளிட்ட நிதி நிறுவன முறைகேடுகள் மீதான நடவடிக்கைகள் என்னென்ன?

வேங்கைவயல் வழக்கு: சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி, வேங்கைவயல் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பி பேசினார். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக நல்லிணக்கத்தை கடைப்பிடிக்கும் வகையில் 29-12-2022 அன்று அனைத்து சமூகத்தினரும் பங்கேற்ற அமைதி ஊர்வலம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றிருக்கிறது. இவ்வழக்கு விசாரணையை துரிதப்படுத்த, இந்த வழக்கு மாநிலக் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சிபிசிஐடி) 14-1-2023 அன்று மாற்றப்பட்டது.

இந்நிலையில்தான், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி நெடுவாசல் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஓய்வுபெற்ற நீதியரசர் சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து, விசாரணை அறிக்கையை 2 மாதங்களுக்குள் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, அந்தக் கிராமத்தில் தீண்டாமையை ஒழிக்க, அனைத்து தரப்பு மக்களிடையே அமைதியை நிலைநாட்ட, இந்த அரசு மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று முதல்வர் பதிலளித்தார். வாசிக்க > வேங்கைவயல் விவகாரத்தில் இதுவரையிலான ‘துரித’ நடவடிக்கைகள்

அமைதிப் பூங்கா: மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 2019-ல் 1,678 ஆக இருந்த கொலைச் சம்பவங்கள் 2022-ல் 1,597 ஆக குறைந்திருக்கிறது. 2018-ல் பெண், சிறுமி கடத்தல் 907 வழக்குகள். ஆனால், 2022-ல் அது 535 ஆக குறைந்திருக்கிறது. 2018-ல் பெண்களுக்கு எதிரான வரதட்சணைக் கொடுமை 55 வழக்குகள். ஆனால், 2022-ல் அது 29 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2018-ல் லாட்டரி சீட்டு விற்பனை வழக்குகள் 4,694. ஆனால், 2022-ல் இது 3,966 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆக, கொலைக் குற்றங்கள் குறைந்திருக்கின்றன.

கொள்ளை, கன்னக்களவு எல்லா குற்றங்களுமே குறைக்கப்பட்டுள்ளன. ஆகவே, அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட சட்டம்-ஒழுங்கு திமுக ஆட்சியில் நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இந்தியாவிலேயே அனைவரும் விரும்பி வந்து வாழும் மாநிலமாகத் நம்முடைய தமிழகம் இன்றைய தினம் அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் திமுக ஆட்சி; அதற்குக் காரணம் இந்தத் திராவிட மாடல் ஆட்சி. அதற்கு இந்தக் காவல் துறைதான் சிறப்பான பணியை நிறைவேற்றித் தந்திருக்கிறது என்று கூறினார். வாசிக்க > அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிறது தமிழகம்

கோடநாடு வழக்கு: கோடநாடு வழக்கு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து தனிப்படையினர் 306 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கு 19-10-2022 அன்று மாநில குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டு அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்தது ஏப்ரல் 24, 2017; 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த சம்பவம் நடந்ததும் உடனடியாக ஆதாரங்களை சேகரித்து, தடயங்களைக் காப்பாற்றி, வாக்குமூலங்களையும் முறையாகப் பெற்று வைத்திருந்தால், விரைந்து வழக்கை முடித்திருக்க முடியும்.

ஆண்டுகள் பல ஓடிய காரணத்தால், சில விஷயங்களை முழுமையாக வெளிக்கொண்டு வர தாமதம் ஏற்படுகின்றது. ஆனாலும், முன்னாள் முதல்வருடைய வீட்டில் நடந்த விவகாரம் இது என்கிற காரணத்தால், அவர் சாதாரண நபர் அல்ல; முதல்வராக இருந்தவர். அவர் இருந்த அந்த பங்களாவிலேயே இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது வேதனைக்குரிய ஒன்று. எனவே, இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில், மிகுந்த கவனத்தோடு விசாரணை நடத்தி, உண்மைக் குற்றவாளியை நிச்சயமாக விரைவில் கண்டுபிடிப்போம் என்று பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x