Published : 20 Apr 2023 09:22 PM
Last Updated : 20 Apr 2023 09:22 PM
மதுரை: அம்பாசமுத்திரம் பல் உடைப்பு வழக்கின் ஆவணங்களின் நகல்களை கேட்ட வழக்கில் நீதித்துறை நடுவர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் சிவசக்தி நகரைச் சேரந்த அருண்குமார் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நான் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தேன். நண்பர் மகேந்திரனும் நானும் சென்ற போது அங்கு வந்த சுபாஷுக்கும், மகேந்திரனுக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இருவரும் தாக்கிக்கொண்டனர். பின்னர் சுபாஷம், அவரது நண்பர்களும் மகேந்திரனை தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக அம்பை போலீஸார் 10.3.2023-ல் கைது செய்தனர்.
நாங்கள் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் இருந்த போது டிஎஸ்பி பல்வீர் சிங் காவல் நிலையம் வந்து கருங்கற்களால் கொடூரமாக தாக்கி எனது நான்கு பற்களை உடைத்தார். மற்ற கைதிகளின் பற்களையும் டிஎஸ்பி உடைத்தார். பின்னர் மருத்துவ சிகிச்சை அளிக்காமல் சிறையில் சேரன்மாதேவி சிறையில் அடைத்தனர். அப்போது பல் உடைக்கப்பட்டது குறித்து வெளியே சொல்லக்கூடாது என போலீஸார் எங்களை மிரட்டினர்.
என் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை கேட்டு அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். என் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை ரத்து செய்து என் மீதான வழக்கின் முதல் தகவல் அறிக்கை, கைது விவகாரம், மருத்துவ பரிசோதனை அறிக்கை உட்பட நீதிமன்றத்தில் உள்ள என் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரனைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் ஹென்றிடிபேன், ஆர்.கருணாநிதி வாதிடுகையில், போலீஸார் மனுதாரரை கடுமையாக தாக்கி பற்களை உடைத்துள்ளனர். வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கின் முக்கியத்துவம் கருதி ஆவணங்களின் நகல்களை வழங்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து, மனுதாரர் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நாளை (ஏப்.21) தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT