Published : 20 Apr 2023 08:43 PM
Last Updated : 20 Apr 2023 08:43 PM
சென்னை: "அதிமுகவைப் பொறுத்தவரை இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும். கட்சியின் தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியிலும் வீறுநடை போடும்" என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது. "தேர்தல் ஆணையம் அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தீர்ப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே நீதிமன்றமும், பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது செல்லும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற தீர்ப்பையும் வழங்கியிருந்தது.
அதிமுகவைப் பொறுத்தவரை இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும். கட்சியின் தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியிலும் வீறுநடை போடும். ஏற்கெனவே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அந்தத் தேர்தலில் கட்சியினுடைய அனைத்து பொது உறுப்பினர்களும் வாக்களிக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்கி ஏகமனதாக உறுப்பினர்கள் பொதுச் செயலாளராக என்னை தேர்ந்தெடுத்துள்ளனர். அனைத்து நிர்வாகிகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட சட்டப்போரட்டத்தை நடத்திதான் இந்த வெற்றியை பெற்றிருக்கிறோம். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால், ஒன்றரை கோடி அதிமுக உறுப்பினர்களும் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டுள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.
அப்போது அவரிடம் பொதுச் செயலாளராக உங்களுடைய பணி எப்படி இருக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அதிமுகவின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டுத்தான் இருக்கிறது. புதிதாக நாங்கள் எதுவும் செயல்படவேண்டியது இல்லை. இப்போது உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டு, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி நடந்துவருகிறது. ஒவ்வொரு பூத்துக்கும் பூத் கமிட்டி அமைக்கின்ற பணியைத் தொடங்கியிருக்கிறோம். ஒவ்வொரு பூத்துக்கும் மகளிர் அணியைச் சேர்ந்தவர்களை நியமிக்கும் பணியையும் தொடங்கியிருக்கிறோம். அதேபோல் ஒவ்வொரு பூத்துக்கும் இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறை தொடங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது" என்றார்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு ஒற்றைத் தலைமையாக உருவெடுத்துள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "ஒற்றைத் தலைமை என்று சொல்லவே வேண்டாம். என்னைப் பொறுத்தவரை நான் சாதாரண தொண்டன்தான். கட்சிக்கான பொதுச் செயலாளராக அனைவரும் இணைந்து என்னைத் தேர்வு செய்துள்ளனர். கட்சிக்கு ஒரு தலைமை தேவை என்ற அடிப்படையில் என்னை தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளனர். அவர்களோடு நானும் ஒரு தொண்டனாக பயணித்து மீண்டும் அதிமுக அரசு அமைப்பதுதான் எங்களுடைய லட்சியம்" என்றார்.
கட்சியில் ஒருசிலரை தவிர மற்றவர்களை இணைத்துக் கொள்வோம் என்று கூறியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். ஒருசிலர் என்றால், ஆரோக்கியமாகவும், எங்கள் கட்சி வலிமையாக இருக்க வேண்டும். திமுகவை எதிர்க்கக்கூடிய தெம்பும் திரானியும் உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டும்தான். இந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதுதான் எங்களுடைய லட்சியம். அந்த லட்சியத்தோடு எங்களுடன் இணைந்து வருபவர்களுடன் நாங்கள் பயணிப்போம். ஆனால், நான் ஏற்கெனவே சொன்னதைப் போல ஒருசிலரை தவிர்த்து, இந்த கட்சிக்கு வலு ஊட்டுகின்றவர்கள், விசுவாசமாக இருக்கிறவர்கள், இந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் உடையவர்களை நாங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்வோம், ஒருசிலரைத் தவிர" என்றார்.
அப்போது, அதிமுகவில் ஏற்பட்டிருந்த குழப்பம் திமுகவுக்கு சாதகமாக இருந்ததா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "அதிமுக என்பது ஒன்றுதான். அதற்கான தெளிவான முடிவு இன்று வந்துவிட்டது. அதிமுகவில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சில சுயநலவாதிகள் கட்சியிலிருந்து பிரிந்து சென்றுள்ளனரே தவிர, உண்மையான தொண்டர்கள் கட்சியில் நிறைந்து உள்ளனர்.
முதலில் அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள்தான் இருந்தனர். தற்போது அதை இரண்டு கோடி உறுப்பினர்களாக மாற்ற நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக கட்சி நிர்வாகிகள் ஆங்காங்கே உறுப்பினர் சேர்க்கை படிவங்களைக் கொடுத்து வருகின்றனர். கட்சிக்கு பேராதரவு மக்களிடத்தில் உள்ளது. எனவே எந்த குழப்பத்துக்கும் இடமில்லை. மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வரும்" என்று அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் மீண்டும் வலியுறுத்தப்படுமா என்று கேட்க்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நிச்சயமாக, சட்டப்படி பேரவைத் தலைவருக்கு மீண்டு கடிதம் கொடுப்போம். பேரவைத் தலைவர் இது தொடர்பாக நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம். இந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி இன்றைக்கு நேற்று கொடுக்கப்பட்ட பதவி அல்ல. என்றைக்கு இந்த சட்டமன்ற அவை ஏற்படுத்தப்பட்டதோ, அன்றுமுதல் இன்று வரை, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி வழங்குவது மரபு. அந்த மரபை பேரவைத் தலைவர் செயல்படுத்துவார் என்று நம்புகிறோம். அதற்கான காரணங்களை நாங்கள் கொடுப்போம்.
நீதிமன்றத்திலும் முழுமையான தீர்ப்பு வந்துவிட்டது. தேர்தல் ஆணையமும் நல்ல தீர்ப்பைக் கொடுத்துவிட்டது. எனவே அதிமுக இன்றைக்கு எங்களோடு இருக்கிறது. எங்களைச் சார்ந்தவர் ஒருவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக வருவதற்கு நிச்சயமாக நல்ல அறிவிப்பைக் கொடுப்பார் என்று நம்புகிறோம்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும், தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அங்கீகாரத்தால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது. | வாசிக்க > எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது தலைமைத் தேர்தல் ஆணையம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT