Published : 21 Sep 2017 11:27 AM
Last Updated : 21 Sep 2017 11:27 AM
கோவை கருமத்தம்பட்டி நெடுஞ்சாலை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையில், சோமனூரில் கட்டப்பட்டுள்ளது ரயில்வே மேம்பாலம்.
அங்குள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. சுமார் ரூ.13 கோடி செலவில் 2011-ல் தொடங்கப்பட்ட மேம்பாலக் கட்டுமானப் பணி நடைபெற்று, 2014-ம் ஆண்டில் மேம்பாலம் திறந்துவைக்கப்பட்டது.
உதகை, கொடைக்கானல் மலைப் பகுதிகளை இணைக்கும் சாலையில் உள்ள முக்கிய மேம்பாலமான இதன் மூலம், சோமனூர், சாமளாபுரம், காரணம்பேட்டை, பருவாய், காமநாயக்கன்பாளையம், பல்லடம், சூலூர் உள்ளிட்ட பகுதி மக்கள் பெரிதும் பயனடைகின்றனர்.
மேலும், கோவை-சேலம் நெடுஞ்சாலையில் உள்ள கணியூர் சுங்கச் சாவடியைத் தவிர்ப்பதற்காக, ஏராளமானோர் இந்த மேம்பாலத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், இந்த மேம்பாலத்தின் மேல்பகுதி தளம் அடிக்கடி உடைந்துவிடுவதாகவும், தொடர்ந்து விபத்துகள் நேரிடுவதாகவும் இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
15 பேர் பலி?
இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜான் சகாய ஆல்பர்ட் ‘தி இந்து’விடம் கூறியதாவது: மேம்பாலம் திறக்கப்பட்டு 3 ஆண்டுகளிலேயே பல இடங்களில் விரிசல் விட்டுவிட்டது. மேலும், மேம்பாலத்தின் மேல்பகுதியில் உள்ள தரைத்தளம் அடிக்கடி பெயர்ந்து, குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அவ்வப்போது குழிகளைச் சீரமைத்தாலும், சில நாட்களில் மீண்டும் உடைந்துவிடும். இதனால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் செல்வோர் இந்தக் குழியில் சிக்கி, நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். வேகமாக வரும் வாகனம் அவர்கள் மீது மோதுகிறது. இதுபோன்ற விபத்துகளில் சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏராளமானோர் காயமடைந் துள்ளனர்.
மழைக் காலத்தில் மேம்பாலத்தின் மேல்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தினமும் சுமார் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வாகனங்கள் செல்வதால், மேம்பாலத்தின் மேல்பகுதி வலுவிழந்து, உடைந்து விடுகிறது. கணியூர் சுங்கச் சாவடியில் மிக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் இந்த மேம்பாலத்தையே பயன்படுத்துகின்றன. அவற்றின் பாரத்தை இந்த மேம்பாலத்தால் தாங்கமுடியாமல், அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் புகார் செய்தால், அவர்கள் மேம்பாலத்தின் மேல் பகுதியில் சிறிய சீரமைப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
ஆனால், சில நாட்களில் மீண்டும் மேம்பாலம் குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது. எனவே, மேல்பகுதியை முழுமையாக அகற்றிவிட்டு, புதிதாக, வலுவான தளம் அமைக்க வேண்டும். அல்லது மேம்பாலத்தை இடித்துவிட்டு, புதிய மேம்பாலம் கட்ட வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
தேங்கும் தண்ணீர்
இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் கூறும்போது, ‘மேம்பாலத்தின் மேல் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சீரமைத்து விடுகிறோம். எனினும், அடிக்கடி இந்தப் பிரச்சினை ஏற்படுவதால், மேம்பாலத்தின் மேல்பகுதி தளத்தை முழுமையாக அகற்றிவிட்டு, வலுவான தளம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT