Published : 20 Apr 2023 12:29 PM
Last Updated : 20 Apr 2023 12:29 PM
சென்னை: பழைய சாலையை அகழ்ந்து எடுத்த பிறகு 5 நாட்களில் புதிய சாலை பணியை தொடங்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.55.61 கோடி மதிப்பீட்டில் 78.29 கிலோ மீட்டர் நீளத்தில் 452 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு சேமிப்பு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.29.71 கோடி மதிப்பீட்டில் 51.37 கிலோ மீட்டர் நீளத்தில் 300 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.39.39 கோடி மதிப்பீட்டில் 75.16 கிலோ மீட்டர் நீளத்தில் 405 சாலைகள் என மொத்தம் ரூ.124.71 கோடி மதிப்பீட்டில் 204.82 கிலோ மீட்டர் நீளத்தில் பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச்சாலைகள் உட்பட 1,157 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சாலைப்பணிகளை மேற்கொள்ளும்போது, பழைய சாலைகள் அகழ்ந்து எடுத்துவிட்டு புதிய சாலைகள் அமைப்பதில் கால தாமதம் ஆவதாக கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தில் கருத்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில்," சென்னையில் 997 இடங்களில் சாலைகள் அமைக்குப் பணிகள் தொடங்கியுள்ளது. 291 இடங்களில் பழைய சாலைகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பழைய சாலைகளை அகழ்ந்து எடுத்த பின்னர் தான் புதிய சாலை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும். பழைய சாலையை அகழ்ந்து எடுத்த மூன்று நாட்களுக்குள், புதிய சாலை அமைக்கப்பட வேண்டும். பழைய சாலை அகழ்ந்து எடுக்கப்பட்டபிறகு ஐந்து நாட்கள் பின்னரும் புதிய சாலை அமைக்கும் பணிகளை தொடங்காவிட்டால், அபராதம் விதிக்கப்படும். தினசரி ரூ.5000 வீதம் பணிகள் முடியும் வரை அபராதம் விதிக்கப்படும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT