Published : 20 Apr 2023 06:06 AM
Last Updated : 20 Apr 2023 06:06 AM
சென்னை: தமிழக ஆளுநர் மாளிகை செலவு குறித்த விவாதத்தின்போது அவை முன்னவர் துரைமுருகன் பேசுகையில், நிதி மேலாண்மை குளறுபடிகள் விஷயத்தில் ஆளுநராக இருந்தாலும், ஆண்டவனாக இருந்தாலும் அதற்குரிய தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிதித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகை யில், “கடந்த 2020-ம் ஆண்டு அதி முக ஆட்சியில் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான அட்சய பாத்திரம் காலை உணவுத் திட்டம் தமிழக அரசின் திட்டமாக அறிமுகப்படுத்தப் பட்டதா அல்லது ஆளுநரின் முடிவு அடிப்படையில் செயல் படுத்தப்பட்டதா என தெரியவில்லை.
இந்த விஷயத்தில் ஆளுநரின் செயல்பாட்டை தொடாமல் நிதி மேலாண்மை பற்றி மட்டும் கூற விரும்புகிறேன். எந்த மாநிலமும் வழங்காத அளவுக்கு தமிழக ஆளுநருக்கு விருப்பவுரிமை நிதியையும், கூடுதல் சலுகைகளையும் தமிழக அரசு வழங்கியுள்ளது. அதிமுக கொறடா வேலுமணி: அட்சய பாத்திரம் என்ற தன்னார்வ அமைப்பினர் காலை உணவுத் திட்டத்துக்காக இடம், ஒருங்கிணைந்த சமையல் கூடம் உள்ளிட்ட உதவிகளை தமிழக அரசிடம் கேட்டனர். அது நல்ல திட்டம் என்பதால் அதற்கான இடங்களை வழங்கினோம்.
அவை முன்னவர் துரைமுருகன்: உங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தைப் பற்றி குறைகூறவில்லை. நிதி மேலாண்மையில் உள்ள குளறுபடிகளைத்தான் நிதி அமைச்சர் விளக்கியுள்ளார். இந்த விவகாரத்தில் ஆளுநராக இருந்தாலும் சரி, ஆண்டவனாக இருந்தாலும் சரி அதற்குரிய தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும் என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT