Published : 20 Apr 2023 06:26 AM
Last Updated : 20 Apr 2023 06:26 AM

பாரதி கொள்ளுப்பேரனுக்கு `மகாகவி பாரதியார் விருது' கிடைக்குமா? - தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

மதுரை: மகாகவி என கொண்டாடப்படும் பாரதியாரின் நாட்டுப்பற்று, தேசிய உணர்வு, சமயச் சீர்திருத்தக் கருத்துகள், தமிழ்மொழிப் பற்று பெண் விடுதலை ஆகியவை காலம் உள்ளவரை பேசப்படுபவையாக இருக்கின்றன.

பாரதியார் வாழ்ந்த காலத்தில் இன்றைய நவீன வசதிகள் எதுவும் இல்லை. ஆனாலும் அவரது கவிதைகள், கருத்துகள் மக்களிடையே பெரும் புரட்சியை ஏற்படுத்தின. பாரதியாரைப் பின்பற்றி அவரது குடும்பத்தினரும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு தொடர்ந்து பல்வேறு பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர்.

அந்த வழியில் பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதி(65), பாரதியாரின் கவிதைகள், கட்டுரைகளை இந்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதற்காக கச்சேரி, சொற்பொழிவு வடிவில் உலகம் முழுவதும் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

பாரதியாருக்கு தங்கம்மா பாரதி, சகுந்தலா பாரதி ஆகிய 2 மகள்கள் இருந்தனர். தங்கம்மா பாரதி மகள் லலிதா பாரதி. இவரது மகன்தான் வெ.ராஜ்குமார் பாரதி. சிறு வயதிலே முறைப்படி கர்நாடக, ஹிந்துஸ்தானி இசைகளைக் கற்றுக் கொண்டவர்.

அடிப்படையில் பொறியாளரான இவர், இசை மீதான ஆர்வத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பாடகராகவும், இசையமைப்பாளராகவும் அறியப்படுகிறார். பாரதியார் போலவே தமிழ் மொழி மீது பற்றுக்கொண்டு தமிழ் புலமை பெற்ற இவர், இசைத் துறையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார்.

பாரதியார் பாடல்களை குறுந்தகடு வடிவில் வெளியிட்டு அதனைப் பரப்புவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

பாரதி பாடல்களுக்கு இசை: பாரதியாரின் பல பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார். சில திரைப்படங்களில் பின்னணிப் பாடல்களையும் பாடியுள்ளார். மற்ற தமிழ் அறிஞர்களைப்போல் ராஜ்குமார் பாரதியும் தமிழ் மொழியையும், பாரதியாரின் கவிதைகளையும், கட்டுரைகளையும் உலகம் முழுவதும் பரப்பி வருகிறார்.

ஆனால், அவருக்கு இதுவரை தமிழக அரசால் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. பாரதியாருக்குப் பின் அவரது கொள்ளுப்பேரனுக்கு அவர் செய்து வரும் சேவைகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இதுகுறித்து மதுரை மகாகவி பாரதியார் சிந்தனையாளர்கள் மன்றத்தின் செயலாளர் ரா.லெட்சுமிநாராயணன் கூறியதாவது: தமிழக அரசு பாரதியார் கவிதைகள், கட்டுரைகளை நன்கு கற்று அவரின் சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளைக் கடைப்பிடித்து மக்களிடம் கொண்டு சேர்ப்போருக்கு `மகாகவி பாரதியார் விருது' வழங்குகிறது. அவர்களைப்போலவே பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதியும், பாரதியார் கவிதைகள், பாடல்களைப் பாடியும், கட்டுரைகள் எழுதியும் சொற்பொழிவாற்றியும் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு வருகிறார். மேலும், சமூக முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டு வருகிறார்.

தமிழ்நாடு தவிர ராஜ்குமார் பாரதி, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, கனடா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து தமிழ் சங்கங்களின் ஏற்பாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பாரதியாரின் கவிதைகளைப் பாடி தமிழ் மொழிக்கும், பாரதியாருக்கும் சிறப்புச் செய்து வருகிறார்.

பாரதியாரின் தேசியப் பாடல்களை முறையான சங்கீத சுருதி, ராகம், தாளத்தோடு பாடக்கூடியவர். கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்றாலும் அங்கு முதலில் பாரதியார் கவிதைகளைப் பாடுவார். பாரதியாரின் பெண் விடுதலை, பெண் உரிமை, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றி ராஜ்குமார் பாரதி தனது பேச்சால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

பாரதியின் கட்டுரைகளை சிறப்பான முறையில் சொற்பொழிவாற்றும் ஆற்றலைப் பெற்றவர். இவர் கலைமாமணி, சங்கீத நாடக அகாடமி விருது பெற்றுள்ளார். இந்த விருதுகளை அவர் பெற்றிருந்தாலும் இதுவரை தமிழக அரசு வழங்கும் ‘மகாகவி பாரதியார்’ விருது அவருக்கு வழங்கப்படவில்லை.

அதனால், 2023-ம் ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருதை தமிழக அரசு வழங்க வேண்டும். பாரதியாரின் குடும்பத்தினர், அந்த விருதை அவருக்கு வழங்க வேண்டும் என்று கூற மாட்டார்கள். பாரதியாரின் கொள்கைகளைப் பரப்பும், பின்பற்றும் எங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்கள்தான் கேட்க வேண்டும். இந்த விருதைபெற, பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதிக்கு முழு தகுதி உண்டு. தமிழ்மொழிக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பாடுபடுவோரைத் தேடிக் கண்டறிந்து ஊக்குவிக்கு வேண்டியது தமிழக அரசின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x