Published : 20 Apr 2023 05:41 AM
Last Updated : 20 Apr 2023 05:41 AM
சென்னை: வணிக வரித் துறையில் மொத்தம் ரூ.27,526.82 கோடி வரி நிலுவை உள்ளது. நிதியமைச்சர், முதல்வர், ஆளுநர் ஒப்புதலுக்கு பிறகு, வணிகர்களுக்கு வாய்ப்பு தரும் சமாதான திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
வணிக வரித் துறையில் நிலுவையில் உள்ள வரியை வசூலிக்க,சமாதான திட்டம் கொண்டுவருவது குறித்த கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார். ‘‘கடந்த காலங்களில் சமாதான திட்டத்தில் வசூலிக்கப்பட்ட தொகைகள், ஒவ்வொரு சட்டத்தின் கீழும் நிலுவையில் உள்ள தொகைகள் குறித்து தெரிவிக்க வேண்டும்’’ என்று அவர் கூறினார்.
இதற்கு பதில் அளித்து வணிக வரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: வணிக வரி துறையில் நிலுவை வரிகளை செலுத்தி, தீர்வு காண வணிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ஒருமுறை திட்டமான சமாதான திட்டத்தை முதலில் கடந்த 1999-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி கொண்டுவந்தார். பின்னர், 2002, 2006, 2008, 2010, 2011-ம் ஆண்டுகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தற்போது வரி நிலுவையாக, தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி இனங்களில் ரூ.16,732.39 கோடி, மத்திய விற்பனை வரி இனங்களில்ரூ.6,532.75 கோடி, தமிழ்நாடு பொதுவிற்பனை வரி இனங்களில் ரூ.4,107.85 கோடி என பல சட்டங்களின்கீழ் மொத்தம் ரூ.27,526.82 கோடி வரி நிலுவை உள்ளது.
கடந்த 2021 ஆகஸ்டில் பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, சமாதான திட்டம் தொடர்பாக கோப்பு தயாரித்து, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் கடந்த 2022 மே 10-ம் தேதி ஒப்புதல் வழங்கினார். அன்று, பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் என்பதால் சட்ட மசோதா அறிமுகம் செய்யஇயலவில்லை. எனவே, அவசரச்சட்டமாக இயற்ற உத்தேசித்து, சட்டத் துறையை தொடர்ந்து, நிதித்துறைக்கு கோப்புகள் அனுப்பப் பட்டன.
நிதி அமைச்சர் கேட்டுள்ள விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சமாதான திட்டம் செயல்படுத்துவதற்கான சட்ட மசோதா குறித்த கோப்பு தற்போது அவரதுஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. நிதி அமைச்சர் ஒப்புதலுக்கு பிறகு, முதல்வர், ஆளுநருக்கு அனுப்பி, அவர்களது ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, சமாதான திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment