Published : 20 Apr 2023 05:36 AM
Last Updated : 20 Apr 2023 05:36 AM

மீன்வள பல்கலை. துணைவேந்தர் நியமனம் உட்பட 3 சட்ட திருத்தங்கள் தாக்கல்: சட்டப்பேரவையில் நாளை நிறைவேற்றப்படும்

சென்னை: மீன்வள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை அரசே நியமிக்கும் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட 3 சட்ட திருத்தங்கள் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் ஏற்கெனவே சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 12 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநருக்கு பதில் தமிழக அரசே நியமிக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாக்கள் சட்டப்பேரவையில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், மீன்வள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரையும் அரசே நியமிக்கும் வகையில் அந்த பல்கலைக்கழகத்துக்கான சட்டத்தை திருத்தும் மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்றுதாக்கல் செய்தார்.

அதிமுக, பாஜக எதிர்ப்பு: இந்த மசோதாவை, அறிமுகநிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுகவின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பாஜகவின் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர். இருப்பினும், சட்டத் திருத்த மசோதா அறிமுகம்செய்யப்பட்டது. இந்த மசோதா நாளை (ஏப்.21) ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

அதேபோல், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனத்தின் பதிவுச் சான்று வழங்குதல் உள்ளிட்ட நோக்கங்களுக்கான திருத்தச்சட்ட முன்வடிவை அமைச்சர் சி.வி.கணேசன் அறிமுகம் செய்தார்.

பழமையான சட்டங்கள் நீக்கம்: மேலும், தமிழக அரசால் கடந்த 1976 முதல் 2017-ம் ஆண்டு வரை பல்வேறு துறைகளின்கீழ், கொண்டுவரப்பட்ட 175 சட்டங்கள், திருத்தச் சட்டங்கள் தற்போதைய சூழலில் பழமையானதாக, வழக்கத்தில் இல்லாமல் இருக்கும் நிலையில் உள்ளதால் அவற்றை நீக்கும் சட்ட முன்வடிவை சட்டஅமைச்சர் எஸ்.ரகுபதி கொண்டுவந்தார். இவையும் நாளை ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x