Published : 20 Apr 2023 05:46 AM
Last Updated : 20 Apr 2023 05:46 AM

முதியோர், கர்ப்பிணிகள் கோயில்களில் தரிசனம் செய்ய தனி வரிசை - அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: கோயில்களில் முதியோர், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்தபின்இதுவரை 632 கோயில்களுக்குரூ.128 கோடியில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இத்தகைய திருப்பணிகள் நடத்துவதில் தேசிய அளவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. இதுதவிர கடந்த 2 ஆண்டுகளில் ரூ.4,262 கோடிமதிப்புள்ள 4,578 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ரூ.3,819 கோடி மதிப்புள்ள 3,177 ஏக்கர்நிலங்கள் மட்டுமே மீட்கப்பட்டன. முதல்வரின் வழிகாட்டுதலில் கோயில்களின் நலன்களை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் அக்னித்தீர்த்தப் படித்துறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.50கோடி அரசு மானியம் வழங்கப்படும். கிராம தெய்வங்களின் சுடுமண் சிற்பங்களை பாதுகாத்து சீரமைக்கும் பணி 6 கோயில்களில் ரூ.3 கோடியில் மேற்கொள்ளப்படும். திருப்பைஞ்ஞீலி, திண்டல் உட்பட 15 கோயில்களில் புதிய ராஜகோபுரம் ரூ.25.98 கோடி மதிப்பில் கட்டப்படும்.

மேலும், கோயில்களில் முதியோர், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்படும்.

இதுதவிர 46 கோயில்களில் ரூ.25.94 கோடியில் கோயில் குளங்கள் சீரமைக்கப்படும். வடலூர் அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 3 நாள் தைப்பூச விழாவுக்கு வருகை தரும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் தரப்படும்.

கோயில்களில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகள் திருமணத்துக்கு 4 கிராம் தங்கத்தாலி அளிக்கப்படும். ஒருகால பூஜை திட்டம் மேலும் 2 ஆயிரம் கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும். இந்த கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். அவர்களின் பிள்ளைகளின் மேற்படிப்புக்கு ஆண்டுக்கு 400 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மைய நிதி ஏற்படுத்தப்படும்.

ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.4 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தப்படும். ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு ரூ.1000 பொங்கல் கொடையும்,அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.6,000 ஊக்கத்தொகையும் தரப்படும்.

ஓலைச் சுவடிகள் மற்றும், மூலிகை ஓவியங்கள் ஆய்வு மையம் சென்னையில் ரூ.5 கோடியில் ஏற்படுத்தப்படும். பழனி -இடும்பன் மலை, அனுவாவி, திருக்கழுக்குன்றம், திருநீர்மலை ஆகிய மலைப்பகுதிகளில் அமைந்துள்ள 4 கோயில்களில் ரூ.66 கோடியில் ரோப் கார் அமைக்கப்படும்.

சிறுவாபுரி, மேல்மலையனூர், குமாரவயலூர், மருதமலை, அழகர் கோயிலில் ரூ.200கோடியில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். ஆயிரம் ஆண்டு பழமையான 84 கோயில்கள் ரூ.149 கோடியில் புனரமைக்கப்படும் என்பன உட்பட 249 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x