Published : 20 Apr 2023 05:59 AM
Last Updated : 20 Apr 2023 05:59 AM
சென்னை: புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்கு மற்றும் அரசின் பங்கான ரூ.61,251.16 கோடி தொகை, எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சமர்ப்பித்த, 2023-2024-ம் ஆண்டுக்கான நிதித் துறை கொள்கை விளக்கக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 1.4.2003 மற்றும் அதற்குப் பின்பு அரசுப் பணியில் சேருவோருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு இணையான தொகையை அரசு தன் பங்களிப்பாக செலுத்துகிறது.
கடந்த 31.3.2022 நிலவரப்படி, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், உள்ளாட்சி அமைப்புப் பணியாளர்கள் உள்பட 61.28 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். பணியாளர்களின் பங்களிப்பு, அரசு பங்களிப்புத் தொகை மற்றும் வட்டி உட்பட மொத்தம் ரூ.61,251.16 கோடி எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் பரிசீலனை: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய கடந்த 2016-ம்ஆண்டு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை27.11.2018-ல் அரசிடம் சமர்ப்பிக்கப்பட் டது. அந்த அறிக்கை அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT