Published : 20 Apr 2023 06:25 AM
Last Updated : 20 Apr 2023 06:25 AM
சென்னை: தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வரை சந்தித்த பிறகு நடைபெற்ற திருமாவளவனின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, திடீர் சலசலப்பு ஏற்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் நேற்றுதலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, “வேங்கைவயல் சம்பவத்தைப் பொறுத்தவரை, உண்மையைக் கண்டறிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான உறுதியை அரசு அளித்துள்ளது. காலக்கெடு என்பது பிரச்சினை அல்ல. சில நிர்வாகச் சிக்கல்கள், உறுதிப்படுத்தப்படாத தகவல் போன்றவை இருக்கலாம்.
தமிழக அரசு தலித் மக்களுக்கு எதிராக இல்லை. வேங்கைவயல் பிரச்சினையில் யாரையும் காப்பாற்றும் முயற்சியிலும் அரசு ஈடுபடவில்லை. தலித் மக்களுக்கு எதிராகச் செயல்பட வேண்டிய தேவை அரசுக்கு இல்லை. புலனாய்வில் அதிகாரிகளுக்கு இருக்கும் தேக்கம் என்னவென்று நமக்குத் தெரியவில்லை” என்றார்.
அப்போது, “நீங்கள் திமுகவினர் போல பேசுகிறீர்கள்" என்று செய்தியாளர் ஒருவர் குறிப்பிட, திருமாவளவன் அளித்த பதிலால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
திருமாவளவன் கூறும்போது, "இதுபோல பேசும் வேலையை என்னிடம் வைத்துக்கொள்ள வேண்டாம். வேறு யாரிடமாவது வைத்துக்கொள்ளுங்கள். நாகரிகம் தவறிப்பேசாதீர்கள். இருக்கும் நிலையைகேள்வியாகக் கேளுங்கள். உங்களது கருத்தை திணிக்காதீர்கள். ஊடகவியலாளர்களுக்கு மரியாதை கொடுக்கும் அளவுக்கு கேள்வி இருக்க வேண்டும். திமுகவை எதிர்த்து எங்களைப்போல யாரும் போராட்டம் நடத்தியதில்லை.
தலித் மக்களின் பிரச்சினைகளுக்காக கடந்த 2 ஆண்டுகளில் 10 போராட்டங்கள் நடத்தியுள்ளோம். திமுக கூட்டணியில் இருப்பதால், அநாகரிகமாகப் பேசக்கூடாது.
திமுககாரனா நான்? அதிகாரிகள், அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். தாமதத்துக்கான காரணத்தை நீங்கள் கூறுங்கள். ஊடகவியலாளர் முன்னிலையில் கையைக் கட்டி, குனிந்து பேச வேண்டுமா? என்னை திமுக-காரன் என்று கைநீட்டிப் பேசுகிறார். இந்த வேலையெல்லாம் மற்றவரிடம் வைத்துக் கொள்ளுங்கள். உள்நோக்கத்தோடு கேள்வி கேட்காதீர்கள். இதுவரை பாஜகவினரிடம் இப்படி கேள்வி கேட்டிருக்கிறீர்களா?’’ என்று கூறிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார்.
விசிக எம்எல்ஏவான எஸ்.எஸ்.பாலாஜி குறுக்கிட்டு, “உங்கள் வீரத்தையெல்லாம் இங்குதான் காட்டுகிறீர்கள். இந்த வீரத்தை மற்ற இடத்தில் காட்டுங்கள். திருமாவளவன் ஏதாவது முறைதவறிப் பேசினாரா? உள்நோக்கத்துடன் கேள்வி கேட்கக் கூடாது. அவமதிக்கும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு எல்லாம் சென்று வருகிறீர்கள்” என்றார்.
ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ பேசும்போது, “வேங்கைவயலில் ஒரு போராட்டத்தைக்கூட அதிமுக, பாஜக நடத்தியது கிடையாது. இப்போது பழனிசாமி வருவார், அவரிடம் கேளுங்கள்” என்றார்.
திருமாவளவன் சென்ற பிறகு,எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட விசிகவினர், செய்தியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு நீடித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...