Published : 19 Apr 2023 06:26 PM
Last Updated : 19 Apr 2023 06:26 PM

ரூ.331 கோடியில் திருப்பணிகள், 2,000 கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.1,000 - தமிழக அரசின் புதிய அறிவிப்புகள்

சென்னை: "2,000 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.1000 வழங்கப்படும்" என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்துசமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிப்புகளின் விவரம்: * திருவண்ணாமலை மற்றும் சமயபுரம் திருக்கோயில்களில் கோபுரங்கள் மற்றும் விமானங்கள் இரவு நேரங்களில் பக்தர்கள் கண் குளிர, மனம் மகிழ ரூ.20.92 கோடியில் வண்ணங்கள் ஒளிரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.

  • விழுப்புரம் மாவட்டம் அருள்மிகு ஆடவல்லீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.4.10 கோடியில் 7 நிலை ராஜகோபுரம் கட்டப்படும்.
  • 22 கோயில்களில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.39.83 கோடியில் குடியிருப்புகள் கட்டப்படும்.
  • திருக்கோயில்களில் வழங்கப்பட்டு வரும் அன்னதானம் மற்றும் பிரசாதம் தரமாக வழங்கப்படுவதை உணவு பாதுகாப்பு நிறுவனம் மூலம் தரம் உறுதி செய்யப்படும்.
  • பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மற்றும் கோவை, அனுவாலி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு ரூ.46 கோடியில் புதிய கம்பிவட ஊர்தி அமைக்கப்படும்.
  • திருச்சி மாவட்டம் அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு மாவட்டம் அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில்களில் 5 நிலை ராஜகோபுரங்கள் ரூ.12.50 கோடியில் கட்டப்படும்.
  • 2,000 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.1000 வழங்கப்படும்.
  • ஓய்வுபெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு மாதம் ஓய்வூதியம் ரூ.3,000-லிருந்து, ரூ.4,000 ஆக உயர்த்தியும், மேலும் பொங்கல் கொடையாக ரூ.1000 வழங்கப்படும்.
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் சிதிலமடைந்த 100 திருக்கோயில்களுக்கு ரூ.10 கோடியில் திருப்பணி மேற்கொள்ளப்படும்.
  • ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு 300 பக்தர்கள் ரூ.75 லட்சத்தில் ஆன்மீகப் பயணமாக அழைத்துச் செல்லப்படுவார்கள்.
  • மதுரை மாவட்டம் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் பொய்கைக் கரைப்பட்டி மைய மண்டபம், படிகட்டு மற்றும் பவித்ரபுஷ்கரணி தெப்ப மராமத்துப் பணிகள் ரூ.5.50 கோடியில் மேற்கொள்ளப்படும்.
மறைந்த முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமைச்சர் சேகர்பாபு
  • நாமக்கல் மாவட்டம் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில், திருவாரூர் மாவட்டம் அருள்மிகு சதுரங்க வல்லபநாத சுவாமி திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம் அருள்மிகு திருமூலநாத சுவாமி திருக்கோயிலில் ரூ.4.63 கோடியில் புதிய திருத்தேர்கள் செய்யப்படும்.
  • ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயில் பக்தர்களின் நலனைக் கருதி அக்னித்தீர்த்தப் படித்துறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.50 கோடி மானியம் வழங்கப்படும்.
  • திருவண்ணாமலை மாவட்டம் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் உண்ணாமுலையம்மன் தீர்த்தக்குளம், நிருதி தீர்த்தக்குளம், சனி தீர்த்தக்குளம், கிருஷ்ணர் தீர்த்தக்குளம், சூரிய தீர்த்தக்குளம், பழனி ஆண்டவர் தீர்த்தக்குளம் மற்றும் வருண தீர்த்தக்குளம் உள்ளிட்ட 7 தீர்த்தக்குளங்கள் ரூ.3 கோடியில் சீரமைக்கப்படும்.
  • மானசரோவர் புனிதத் தலத்திற்கு முதன்முறையாக ஆன்மீகப் பணயம் செல்லும் 500 பக்தர்களுக்கு வழங்கி வந்த அரசு மானியம் ரூ.40,000 லிருந்து, ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • முக்திநாத் புனித தலத்திற்கு முதன்முறையாக ஆன்மீக யாத்திரை செல்லும் 500 பக்தர்களுக்கு வழங்கி வந்த அரசு மானியம் ரூ.10,000 லிருந்து, ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
முதல்வரிடம் வாழ்த்துப் பெறும் அமைச்சர் சேகர்பாபு
  • திருச்சி அருள்மிகு ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் மற்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்களில் மகா சிவராத்திரி பெருவிழா கொண்டாடப்படும்.
  • விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை அருள்மிகு சந்திரமவுலீசுவரர் திருக்கோயில், பாதிராப்புலியூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் திருக்குளங்கள் ரூ.4.90 கோடியில் சீரமைக்கப்படும்.
  • திருக்கோயில்களில் உள்ள பழங்கால மூலிகை சுவரோவியங்கள், ஓலைச் சுவடிகள் மற்றும் மூலிகை ஓவியங்கள் சென்னையில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ரூ.5 கோடியில் ஆய்வு மையம் ஏற்படுத்தி பாதுகாக்கப்படும்.
  • ரூ.331 கோடியில் 745 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • சுடுமண் சிற்பங்களைப் பாதுகாத்து சீரமைக்கும் பணி, 6 திருக்கோயில்களில் ரூ.3 கோடியில் மேற்கொள்ளப்படும்.
  • மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், பச்சிளம் பிள்ளைகளுடன் வரும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்படும்.
  • திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாற்றுத்திறனாளிகள் கடலில் தீர்த்தமாட ரூ.50 லட்சத்தில் சிறப்பு நடைபாதை அமைக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x