Last Updated : 19 Apr, 2023 05:45 PM

 

Published : 19 Apr 2023 05:45 PM
Last Updated : 19 Apr 2023 05:45 PM

பேராசிரியர்கள் அடுத்தடுத்து கைது - காமராசர் பல்கலை.யில் பாலியல் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

மதுரை: அடுத்தடுத்து பேராசிரியர்கள் கைது சம்பவத்தால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில், காமராசர் பல்கலைக்கழகத்தில் தொடரும் பாலியல் புகார் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளது.

தென்மாவட்டத்தில் முக்கிய பல்கலைக்கழகமாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. தென்மாவட்டங்கள் மட்டுமின்றி, அருகிலுள்ள திருவனந்தபுரம் உள்ளிட்ட கேரள பகுதிகளில் இருந்தும் ஆராய்ச்சி படிப்புக்கென இப்பல்கலைக்கு மாணவர்கள் வருகின்றனர். இங்கு 20-க்கும் மேற்பட்ட புலங்களும், 77 துறைகளும் உள்ளன. கடந்த கல்வியாண்டு முதல் பல்கலைக்கழக வருவாயைப் பெருக்கும் விதமாக 6 இளங்கலை வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட சுமார் 2,000 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 670 அலுவலர், ஊழியர்களும் பணிபுரிகின்றனர்.

கோஷ்டி பூசல்: மிகவும் பழமையான இந்தப் பல்கலைக்கழகத்தில், சமீப காலமாக ஒரு சில துறைகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இடையே சரியான புரிதல் இன்றி, எதிர்மறையான மனநிலையில் செயல்படுவது போன்ற பிரச்சினைகள் எழுகின்றன. 'ஈகோ' காரணமாக சமுதாய ரீதியாக மாணவர்களை பிரித்தாளும் சூழ்ச்சியும் நிலவுகிறது. தங்களுக்குப் பிடித்த மாணவ, மாணவிகளை பிடிக்காத ஆசிரியர்களுக்கு எதிராகவும், மாணவர்களுக்கு எதிராகவும் தூண்டி விடுவது, மாணவர்களுக்குள் இரு கோஷ்டியாக உருவெடுக்கச் செய்வது போன்ற விரும்பத் தகாத நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன என மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் மாற்றி, மாற்றி புகார் எழுப்புகின்றனர்.

அடுத்தடுத்து கைது சம்பவங்கள்: கடந்த ஆண்டு தொடங்கிய இளநிலை வகுப்புகளை கையாளுவதில் ஒரு சில ஆசிரியர்கள், பல்கலைக்கழகமா, கல்லூரியா என ஈகோ பார்க்கின்றனர். புதிதாக ஆரம்பித்த உளவியல் துறை போன்ற ஓரிரு துறையில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல், பிற துறை ஆசிரியர்களை வகுப்பெடுக்கும் சூழல் உள்ளது என இளங்களை மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சில நாளுக்கு முன்பு மாணவிகளுக்கு எதிராக செயல்பட்டதாக பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் சண்முகராஜா கைது செய்யப்பட்ட நிலையில், உளவியல் துறை மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு அளித்ததாக காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சமூக அறிவியல் துறை பேராசிரியர் கருப்பைா என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டார். இதுபோன்ற நிகழ்வுகள் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று மாணவர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

வழிகாட்டி ஆசிரியர்கள் தவறான போக்கு: இது குறித்து மாணவர்கள் சிலர் கூறும்போது, ''ஒரு காலத்தில் இந்தப் பல்கலை.யில் படித்தாலே பெருமையாக பார்க்கப்பட்ட காலம் உண்டு. தற்போது, அது போன்ற நிலையை எதிர்பார்க்க முடியவில்லை. மதம், சாதி ரீதியாக மாணவர்கள், ஆசிரியர்கள் செயல்படும் சூழல் உள்ளது. பெற்றோர்களும் பிள்ளைகளை சேர்க்க அச்சப்படுகின்றனர். குறிப்பாக மாணவிகளைப் பார்த்து, ஆடை அழகாக இருக்கிறது, உடலமைப்பு சீராக உள்ளது போன்ற இரட்டை அர்த்த வார்த்தைகளில் பேசும் சில ஆசிரியர்கள், பாலியல் ரீதியில் செயல்படுவது போன்ற சர்ச்சைகளும் அதிகரிக்கின்றன. பெரும்பாலும் பிஎச்டி ஆராய்ச்சி மாணவர்களிடம் சம்பந்தப்பட்ட வழிகாட்டி ஆசிரியர்களுக்கு ஏதோ ஒரு வகை எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது.

இது நிறைவேறினால் மட்டுமே உரிய நேரத்தில் அவர்கள் முடித்துவிட்டு போக முடிகிறது. இல்லையெனில் தேவையின்றி இழுத்தடிப்பது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுகிறது. இது தொடர்பாக துணைவேந்தர், பதிவாளரிடம் புகார்கள் அளித்தாலும், விசாரணை, நடவடிக்கை என்பது பெயரளவில் உள்ளது. தற்போது, பல்கலை.யில் தொடங்கி இளநிலை வகுப்புகளுக்கு போதிய வகுப்பறை வசதி, ஆசிரியர்கள் நியமிக்கப் படவில்லை உள்ளிட்ட பல்வேறு தேவைகளும் உள்ளன.

பல்கலை. நிர்வாகம் அது பற்றி நடவடிக்கை எடுப்பதில்லை என்றாலும், மாணவர்களுக்கு எதிரான புகார்களிலும் முறையாக நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர். சமூக வலைதளங்களில் வைரலாகிறது. துணைவேந்தர், நிர்வாகம் பாகுபாடு பார்க்கிறதோ என சந்தேகிக்கப்படுகிறது. வேறு வழியின்றி காவல் நிலையங்களுக்குச் செல்கிறோம். புகாருக்கு உடனுக்குடன் நடவடிக்கை இருந்தால் அடுத்த பிரச்சினை தொடராது'' என்றனர்.

ஆசிரியர்களுக்கு பாலின பகுப்பு பயிற்சி வேண்டும்: காமராசர் பல்கலை பாதுகாப்புக் குழுச் செயலர் முன்னாள் பேராசிரியர் முரளி கூறுகையில், ''சில ஆண்டாக பல்கலை.க்கான துணைவேந்தர் தேர்வில் இருந்தே சில பிரச்சினை தொடங்குகிறது. சமீப காலமாக இப்பல்கலையில் ஆசிரியர்கள் - மாணவர் புரிதலில் இடைவெளி அதிகரித்துள்ளது. இரு தரப்பிலும் நல்லுறவு வேண்டும். பாலினப் பகுப்பு குறித்த பயிற்சி ஆசிரியர்களுக்கு அடிக்கடி அளிக்க வேண்டும். இதற்காக துணைவேந்தர் ஜெ.குமார் தொடர் கூட்டங்களை நடத்தி ஆலோசனைகளை வழங்க வேண்டும். பல்கலை. மேம்பாடுகள் குறித்து நிர்வாகத்திற்கு வலியுறுத்துவோம்'' என்றார். நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, ''எந்தப் புகாரானாலும், கவனத்திற்கு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கிறோம். யாருக்கும் பாகுபாடு பார்ப்பதில்லை'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x