Published : 19 Apr 2023 05:32 AM
Last Updated : 19 Apr 2023 05:32 AM
சென்னை: சமூக சீர்திருத்த தலைவர் இளையபெருமாளின் தொண்டைச் சிறப்பித்து, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் நேற்று பேசியதாவது: சமூக சீர்திருத்தத்தின் பெருமைமிகு தலைவர்களான அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ், எல்.சி.குருசாமி, சுவாமி சகஜானந்தர் ஆகியோர் வரிசையில் கம்பீரமாக நின்று போராடியவர்களில் ஒருவர் எல்.இளையபெருமாள்.
இரட்டை பானை முறை நீக்கம்: சிதம்பரத்தில் பிறந்து, நாடு முழுவதும் பட்டியலின மக்களுக்காக, அடைபட்டிருந்த உரிமை வாசலை திறந்தவர். பள்ளியில் படிக்கும்போது, இரட்டை பானை முறையை பார்த்த அவர், மறைந்திருந்து இரவு நேரத்தில் பானைகளை உடைக்கிறார். இப்படி அவர் தொடர்ச்சியாக உடைத்ததால்தான், அந்த வட்டாரத்தில் இரட்டை பானை முறை நீக்கப்பட்டது.
ராணுவத்தில் சேர்ந்தபோது பாகுபாடு காட்டப்பட்டதால், துணிச்சலாக உயர் அதிகாரியிடம் புகார் செய்தார். இதனால், அந்த பாகுபாடு களையப்பட்டது. ஓராண்டிலேயே ராணுவத்தில் இருந்து விலகி, மக்கள் பணி செய்ய வந்துவிட்டார்.
அம்பேத்கரிடம் பாராட்டு: ஒன்றுபட்ட தென்னாற்காடு, தஞ்சை மாவட்டத்தில் 1940 முதல் 70 வரை பெரிய அளவில் சமூக போராட்டங்களை இளையபெருமாள் நடத்தினார். காங்கிரஸில் இணைந்த அவர், 1952-ல் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில், கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார். அப்போது அவருக்கு 27 வயது. டெல்லி சென்று, அம்பேத்கரை சந்தித்தார். அப்போது, தான்நடத்திவரும் மக்கள் போராட்டங்கள், தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை அவர் பட்டியலிட, அம்பேத்கர் வியந்து பாராட்டியுள்ளார்.
சென்னை எழும்பூர் தொகுதி எம்எல்ஏ (1980-84), மூன்று முறை எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர், அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டி தலைவர் என பல பொறுப்புகளில் பணியாற்றினார். பட்டியலின, பழங்குடி மக்களின் மேம்பாட்டுக்காக 1965-ல் உருவாக்கப்பட்ட அகில இந்திய ஆணையத்தின் தலைமை பொறுப்பை வகித்தபோது, 3 ஆண்டுகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, சாதி கட்டமைப்பு, தீண்டாமை கொடுமை குறித்து ஆய்வு செய்தார்.
இந்திய சமூக அமைப்பின் சாதிய வேர்களை, மறைக்காமல், துல்லியமாக வெளிப்படுத்தும் அறிக்கையாக அது அமைந்தது. எனவே, இந்த அறிக்கை வெளியேவருவதை தடுக்க சிலர் முயற்சித்தனர். அவரது அறையில் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்து தப்பி வந்து, அறிக்கையை தாக்கல் செய்தார்.
ஆணைய அறிக்கையின் பலன்: இதுபோன்று நடக்கும் என தெரிந்து திமுக எம்.பி. இரா.செழியனிடம் அறிக்கையின் பிரதியை இளையபெருமாள் கொடுத்து வைத்திருந்தார். பிற்காலத்தில் கொண்டு வரப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு அடித்தளமே இளையபெருமாள் ஆணையத்தின் அறிக்கைதான்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை கருணாநிதி 1971-ல் கொண்டுவந்தார். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தபோது, அரசு தாக்கல் செய்த மனுவில் இளையபெருமாள் கமிட்டி அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டது. அதை குறிப்பிட்டு, சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த 1998-ல் அம்பேத்கர் பெயரிலான விருதை முதன்முதலாக இளையபெருமாளுக்குதான் கருணாநிதி வழங்கினார். கருணாநிதியும், இளையபெருமாளும் 1924 ஜூன் மாதம்தான் பிறந்துள்ளனர். இது மிகமிக பொருத்தமானது.
அத்தகைய சமூகப் போராளியைபோற்றுவதை திராவிட மாடல் அரசுதனது கடமையாக கருதுகிறது. ‘சமூக இழிவு களையப்பட வேண்டும். சாதிய வன்முறை ஒடுக்கப்பட வேண்டும். சமத்துவ, சுயமரியாதை சமூகம் உருவாக்கப்பட வேண்டும்’ என்ற உன்னத நோக்கத்துக்காக உழைத்த இளையபெருமாளின் தொண்டை சிறப்பிக்கும் வகையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும். இளையபெருமாள் வழியில் சுயமரியாதை சமதர்ம சமூகத்தை அமைப்போம். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT