Published : 19 Apr 2023 05:48 AM
Last Updated : 19 Apr 2023 05:48 AM

அரசு மருத்துவமனைகளில் ரூ.918 கோடியில் புதிய மருத்துவ கட்டமைப்புகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். அப்போது அவர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:

அனைத்து அரசு மருத்துவ மையங்களில் ஆய்வக சேவைகள்ரூ.185.24 கோடியில் மேம்படுத்தப்படும். மருத்துவம் சார்ந்த 4,133 காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (எம்ஆர்பி) மூலம் நிரப்பப்படும். ‘நடப்போம் நலம் பெறுவோம்’ எனும் நோக்கத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. தொலைவு கொண்ட நடைபாதை கண்டறியப்பட்டு, உள்ளூர் மக்களுடன் இணைந்து மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ‘சுகாதார நடைபயிற்சி’ மேற்கொள்ளப்படும். அப்போது, சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.

கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.10.17 கோடியில் கண்காணிப்பு (சிசிடிவி)கேமராக்கள் அமைக்கப்படும். மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க, இருதய பாதுகாப்பு மருந்துகள் வழங்கப்படும். சென்னை கிண்டி கிங் நோய் தடுப்புஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனைக்கு ரூ.146.52 கோடியில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும். சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.64.90 கோடியில் புதிய மாணவியர் விடுதி கட்டப்படும்.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப மற்றும் துணை சுகாதாரநிலையங்கள், நலவாழ்வு மையங்கள், சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேத மருத்துவ நிலையங்களில் ரூ.917.68 கோடியில் புதிய மருத்துவக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். ரூ.298.95 கோடியில் அரசு மருத்துவமனைகளுக்கு சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட உயிர்காக்கும் நவீன உபகரணங்கள் வழங்கப்படும். தாய்-சேய் நல சேவை திட்டங்கள் ரூ.43.41 கோடியில் மேம்படுத்தப்படும்.

நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் 60,587 தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் சிறப்பு முகாம் நடத்தப்படும். தூய்மை பணியாளர்கள் நலன் கருதி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி அறை அமைத்து தரப்படும். ஒருங்கிணைந்த ஆய்வக கட்டமைப்புகள், கருவிகள் ரூ.304.12 கோடியில் மருத்துவனைகளுக்கு வழங்கப்படும்.

போதை மீட்பு சேவைகள் தேவைப்படும் பகுதிகளை கண்டறிந்து, உரிய மனநல ஆலோசனைமற்றும் புனர்வாழ்வு சேவைகள்அனைத்துநிலை மருத்துவமனைகளிலும் கிடைக்க ஏதுவாக ரூ.523 கோடியில் கட்டமைப்பு வலுப்படுத்தப்படும். மேலும், ரூ.21.4 கோடியில் 62 புதிய 108 அவசர கால ஊர்திகள்,13 தாய்-சேய் ஊர்திகள் மற்றும் 92நவீன மருத்துவக் கருவிகள் வழங்கப்படும் என்பன உட்பட 106 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x