Published : 19 Apr 2023 06:01 AM
Last Updated : 19 Apr 2023 06:01 AM

மகளிர் சுயஉதவி குழு தாட்கோ மானியம் ரூ.6 லட்சமாக உயர்வு - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு

சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தாட்கோ மூலம் வழங்கப்படும் ரூ.2.50 லட்சம் மானியம் ரூ.6 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல் விழி செல்வராஜ் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்தும் அறிவிப்புகளை வெளியிட்டும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பேசியதாவது: மகளிர் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், முன்னேற்றத்துக்கான அடிப்படை வருவாய் ஈட்டும் தொழில்களை மேற்கொள்ளவும் தற்போது தாட்கோ மூலம் வழங்கப்படும் ரூ.2.50 லட்சம் மானியம் ரூ.6 லட்சமாக உயர்த்தி வழங்கப் படும்.

வாடகைக் கட்டிடங்களில் இயங்கும் 4 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு ரூ.25 கோடியில் புதிய விடுதிக் கட்டிடங்கள் கட்டப்படும். விடுதிகளில் ஏற்படும் சிறுபராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாணவர்களின் எதிர்பாரா மருத்துவ செலவுகளுக்கு ரூ.7.50 கோடி ஒதுக்கப்படும்.

விடுதிகளில் சிறப்புப் பராமரிப்புப் பணிகள் மற்றும் கண்காணிப்பு கேமரா, பயோ மெட்ரிக் வருகைப் பதிவு வசதிகள் ரூ.25 கோடியில் மேற்கொள்ளப்படும்.

கல்லூரி விடுதிகளில் நவீன வசதிகளுடன்கூடிய கற்றல் கற்பித்தல் அறை ரூ.10 கோடியில் அமைக்கப்படும். விடுதியில் உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1 கோடியில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். சென்னை சமூகப்பணி கல்லூரியில் ரூ.2 கோடி மானியத்தில் சமூகநீதி மற்றும் சமத்துவ மையம் நிறுவப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்கவும் சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதியுடன்கூடிய உதவி மையம் ஏற்படுத்தப்படும்.

தமிழகத்தில் உள்ள 37 வகையான பழங்குடியினரின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு இனவரவியல் ஆய்வு ரூ.3.50 கோடியில் மேற்கொள்ளப்படும். பழங்குடியினர் வசிக்கும் மலைப் பகுதிகளில் இணையதள இணைப்பு வசதி ரூ.10 கோடியில் ஏற்படுத்தப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் கண்காணிக்க திட்ட கண்காணிப்பு அலகு ஏற்படுத்தப்படும். ரூ.10 கோடியில் பழங்குடியின மக்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். வீடற்ற 1,500 பழங்குடியின குடும்பங்களுக்குரூ.45 கோடியில் வீடுகள் கட்டித் தரப்படும்.

தாட்கோ திட்டங்கள் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்கப்படும். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு பயிற்சிகள் அளிக்கப்படும் என்பன உள்ளிட் 25 அறிவிப்புகளை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x