Published : 11 Sep 2017 11:34 AM
Last Updated : 11 Sep 2017 11:34 AM
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொடி விதைப்பு செய்த வயல்களில் அறுவடை பருவத்தில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. சுமார், 500 ஹெக்டேருக்கு மேல் கன்னிப்பூ நெல்சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்தே பருவமழை கைகொடுக்காததால் விவசாயம் பெரும் பாதிப்படைந்தது. போதிய தண்ணீர் இல்லாததால் வயல் வெளிகள் வறண்டன. இதனால், பொடி விதைப்பு நெற்பயிருடன் சேர்த்து 2,000 ஹெக்டேருக்குள் மட்டுமே மாவட்டம் முழுவதும் கன்னிப்பூ நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. குளங்களிலும் தண்ணீர் இல்லாததால் இறச்சகுளம், திருப்பதிசாரம், சுசீந்திரம், பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டநெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது.
நெற்பயிர்கள் சேதம்
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் தற்போது பெய்து வரும் கனமழையால் அணைகளில் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்து வருகிறது. ஆனால், தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியது. சுசீந்திரம், இறச்சகுளம், தேரூர், பூதப்பாண்டி போன்ற பகுதிகளில் முதலில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நன்றாக விளைந்து நெல்மணிகளுடன் அறுவடைக்கு தயாராக இருந்தன. இவற்றில் பெரும்பாலான பயிர்கள் மழை நீரில் மூழ்கி, வயல்களில் சாய்ந்தன. இதனால், ஆயிரக்கணக்கில் செலவழித்து, கடினமாக உழைத்து பயிர் செய்த விவசாயிகள் பேரிழப்பை சந்தித்துள்ளனர்.
பேரிழப்பு
இதுகுறித்து இறச்சகுளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை பணி மேற்கொள்ளலாம் என இருந்த நேரத்தில், தற்போது பெய்து வரும் மழையால் நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி விட்டன. தேவையான நேரத்தில் மழை பெய்யாத நிலையில், தற்போது பெய்து வரும் மழை அறுவடைக்கு தயாரான விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏறபடுத்தியுள்ளது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 500 ஹெக்டேருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் மழை மற்றும் காற்றால் வயல்களில் சாய்ந்து கிடக்கின்றன.
குறிப்பாக பொடிவிதைப்பு செய்த நெற்பயிர்கள் நெருக்கமாக இருப்பதால் தரையோடு தரையாக சாய்ந்து மஞ்சள் நிறத்துடன் கிடக்கிறது. இதனால், இவற்றை அறுவடை செய்வதில் சிக்கல் உள்ளது.
இயந்திரம் மூலம் அறுவடை செய்தால் நெற்பயிர்கள் வீணாகிவிடும். அறுவடை செய்ய காலதாமதம் செய்தாலும், வயலில் சாய்ந்துள்ள நெற்கதிர்கள் முளைக்கும் அபாயம் உள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT