Published : 18 Apr 2023 11:03 PM
Last Updated : 18 Apr 2023 11:03 PM
ராமநாதபுரம்: நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் மீனவர்களின் பங்கு முக்கியமானது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் மீனவர்கள் மத்தியில் பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்துள்ள, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை தேவிபட்டினம் நவபாஷான கோயிலுக்கு வந்தார். அங்கு புரோகிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். பின்னர் கடலுக்குள் அமைந்துள்ள நவாபாஷான கோயிலுக்குச் சென்று கடல் நீரை எடுத்து தலையில் தெளித்து, தரிசனம் செய்தார்.
அங்கிருந்து நடந்தே சென்று கடலடைத்த பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அங்குள்ள சிறுவர்கள் சிலம்பம் சுற்றி ஆளுநரை வரவேற்றனர். அதனையடுத்து கோயில் அருகே அமைந்துள்ள திருமண மண்டபத்தில் ஆளுநர் மீனவ பிரதிநிதிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மீனவ பிரதிநிதி தங்கேஷ் ஆளுநரை வரவேற்றார். அங்கு நடைபெற்ற பள்ளிக் குழந்தைகளின் யோகா நிகழ்ச்சியை ஆளுநர் ரசித்தார்.
தொடர்ந்து ஆளுநர் மீனவர்கள் மத்தியில் பேசும்போது, "உங்களை சந்தித்ததில் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இங்கு ஒவ்வொருவரும் செய்த யோகா முழுமையான யோகா கலையை கற்றவர்கள் போல் இருந்தது பாராட்டிற்குரியது. ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தன்று, சென்னை ராஜ்பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் இங்கு யோகா செய்த மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.
மீனவ சமுதாயம் மிக பழமையான பாரம்பரியத்தை கொண்டது. மகாபாரத காலத்தில் இருந்து மீனவ சமுதாயம் உள்ளது. நாட்டின் பொருளாதார மேம்பாடு, வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு முக்கியமானது. வரும் காலங்களில் கடல் உணவு மிக முக்கியமான உணவாக இருக்கும். மீனவர்களின் வாழ்க்கை ஆபத்தாகவும், கடினமாகவும் உள்ளது. உயிரை பணயம் வைத்து தினமும் உழைக்கின்றனர்.
சுனாமி, புயல் போன்ற இயற்கை பேரிடரின்போது அதிக பிரச்சினைகளை சந்திக்கின்றனர். பேரிடர்களின்போது கடற்கரை கிராமங்கள் மிகவும் பாதிப்படைகின்றன. மீனவர்கள், பழங்குடியினருக்கு பிரதமர் மோடி பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இன்னும் பல திட்டங்களை கொண்டு வருவார். நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவர பிரதமர் உழைத்துக்கொண்டிருக்கிறார்.
எனது விசாரணையில் மீனவ சமுதாயத்தில் இருந்து மருத்துவர், பொறியாளர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரிகள் உருவாகியிருப்பது மிகவும் குறைவு. இந்த சமுதாய மாணவ, மாணவிகள் மற்ற துறைகளுக்கும் வர வேண்டும். நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த, சுயசார்புள்ள நாடாக உருவாகும். மீனவ சமுதாயமும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நாட்டின் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகளிடம் மக்களின் பிரச்சினைகளை முறையிடுவேன். ராஜ்பவனில் நடக்கும் குடியரசு தினம், சுதந்திர தின விழாக்களில் மீனவ சமுதாயத்தினரும் பங்கேற்க வேண்டும்" என பேசினார்.
பின்னர் மீனவ பிரதிநிதி மலைச்சாமி, திருப்பாலைக்குடி போன்ற கிராமங்களில் உள்ள கடும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். விசைப்படகுகள், நாட்டுப்படகுகளுக்கு போல், பைபர் படகுகளுக்கும் டீசல் மானியம் வழங்க வேண்டும். விசைப்படகு வாங்க மானியம் வழங்க வேண்டும். மானிய டீசலை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார். அப்போது ஆளுநர் குடிநீர் பிரச்சினைக்கு ராமநாதபுரம் ஆட்சியரிடம் தெரிவித்து தீர்வு காணப்படும். மானிய டீசல், விசைப்படகு வாங்க மானியம் போன்ற கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துச் செல்வேன் என்றார்.
அதனையடுத்து மீனவர்களிடம் தமிழக ஆளுநர் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து யோகா செய்த பள்ளிக்குழந்தைகள், மீனவர்களுடன் ஆளுநர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆளுநரின் ஆங்கில உரையை ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் தி.விவேக பாரதி மொழிபெயர்ப்பு செய்தார்.
நாளை(ஏப்.19) காலை ஆளுநர் ராமநாதபுரம் அருகே எட்டிவயல் கிராமத்தில் தரணி முருகேசனின் இயற்கை வேளாண்மை பண்ணையை பார்வையிட்டு, அங்கு விவசாயிகளிடம் கலந்துரையாடுகிறார். அதனையடுத்து காலை 10 மணியளவில் திருஉத்தரகோசமங்கை மங்கநாதர் சுவாமி கோயில் சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் மாலை பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடம் மற்றும் கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து காரில் மதுரை சென்று, விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT