Published : 18 Apr 2023 06:00 PM
Last Updated : 18 Apr 2023 06:00 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.அமுதா முன்னிலையில் இன்று 3 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திலுள்ள காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா 2-ம் கட்ட விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையின் முதல் நாளில் பாதிக்கப்பட்ட 5 பேர், அவர்களது உறவினர்கள் 3 பேர் ஆஜராகியிருந்தனர். இந்நிலையில் இன்று 2-வது நாள் விசாரணையின்போது எம். மாரியப்பன், சுபாஷ், வேதநாராயணன் ஆகிய 3 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என். சிலம்பரசன் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”காவல் துறை அதிகாரி பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக கருத்துகள் தெரிவித்தால் அது விசாரணையை பாதிக்கும். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுவது குறித்து கண்காணிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT