Published : 18 Apr 2023 05:16 PM
Last Updated : 18 Apr 2023 05:16 PM
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் விற்பனை இல்லாததால் ரூ.3 கோடி மதிப்பிலான காட்டன் சேலைகள் தேக்கம் அடைந்துள்ளதால் நெசவாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
ராஜபாளையம் அருகே தளவாய்புரம், செட்டியார்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி மூலம் காட்டன் சேலை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள 600க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுதவிர நூற்றுக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வீடுகளில் தறி அமைத்து சேலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தளவாய்புரம் பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்களில் ஆண்டுக்கு ரூ.12 கோடி அளவுக்கு சேலை உற்பத்தி நடைபெறுகிறது. கோடை காலம் மற்றும் திருவிழா காலங்களில் காட்டன் சேலை விற்பனை அதிகளவு நடைபெறும். ஆனால், தற்போது காட்டன சேலைகள் விற்பனை சரிவால் ரூ.3 கோடி மதிப்பிலான காட்டன் சேலைகள் விசைத்தறி கூடங்களில் தேக்கமடைந்துள்ளதால் நெசவாளர்கள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து விசைத்தறி தொழிலாளர்கள் கூறுகையில், ”கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கூலி உயர்வு போராட்டத்தால் 15 நாட்களுக்கு மேல் வேலைக்கு செல்லவில்லை. தற்போது சேலைகள் விற்பனை ஆகாமல் தேங்கி உள்ளதால் மாதம் முழுவதும் வேலை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது" என்றனர்.
இதுகுறித்து பத்திரகாளியம்ம கூட்டுறவு நெசவாளர் சங்க தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், ‘ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டன் சேலைகள் உற்பத்தி பிரதானமாக இருந்தது வந்தது. ஆனால் தற்போது பணியாளர்கள் பற்றாக்குறை, நூல் தட்டுப்பாடு காரணமாக நெசவாளர்கள் கடனாளிகளாகி விசைத்தறி கூடங்களை மூடி விட்டனர்.
இந்நிலையில், தற்போது விற்பனை பாதிப்பால் ஒவ்வொரு தறி கூடங்களிலும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சேலைகள் தேங்கி உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் தறிகளை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT