Published : 18 Apr 2023 04:53 PM
Last Updated : 18 Apr 2023 04:53 PM

துபாய் தீ விபத்தில் உயிரிழந்த சங்கராபுரத்தைச் சேர்ந்த இருவரது குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கல்

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரணத் தொகைக்கான காசோலை வழங்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தான்

கள்ளக்குறிச்சி: துயாய் தீ விபத்தில் உயிரிழந்த சங்கராபுரத்தைச் சேர்ந்த இருவரது குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் நிவாரணத் தொகைக்கான தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசிம் மற்றும் முகமது ரஃபி ஆகிய இருவரும் துபாயில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 15-ம் தேதி துபாயில் அவர்கள் தங்கி இருந்த குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தனர். இதையறிந்த தமிழ்நாடு முதல்வர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகையினையும் அறிவித்தார்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் திருச்சி விமான நிலையம் வழியாக சங்காபுரத்தை வந்தடைந்ததது. இதையடுத்து, முதல்வர் உத்தரவின் பேரில் இன்று சங்காரபுரம் சென்று, உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து அவர்களது குடும்பத்தினரிடம் அரசின் நிவாரணத் தொகையாக தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

இதையடுத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக முதல்வரின் சிறப்பான செயல்பாட்டினால் இதுவரையில் 1725 நபர்கள் வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர், அதேபோன்று 365 உடல்களையும் அரசு செலவில் எடுத்து வந்து ஒப்படைக்கப்பட்டுள்ளது. துபாய் நாட்டில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரண நிதியை வழங்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்” என அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் மற்றும் சங்கராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயசூரியன், திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகம். அன்புமணிமாறன் மற்றும் நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக திருச்சி விமான நிலையம் வந்தடைந்த துபாய் தீ விபத்தில் உயிரிழந்த இருவரது உடலுக்கும் திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x