Published : 10 Sep 2017 02:52 PM
Last Updated : 10 Sep 2017 02:52 PM
சென்னையில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வருவதில் குதிரைப்படை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தப் படைக்கு வெளி மாநிலங்களில் இருந்து விரைவில் 15 குதிரைகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க காவல் துறையில் பல பிரிவுகள் உள்ளன. இதில், குதிரைப் படைப் பிரிவும் முக்கிய பிரிவாக உள்ளது. சட்டம் ஒழுங்கு, ஊர்வலப் பாதுகாப்பு பணி, விழாக்கால பாதுகாப்பு பணி, கடற்கரை பாதுகாப்பு ரோந்து பணிகளுக்கும் குதிரைப் படை பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மெரினாவில் குதிரைப்படை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மெரினாவில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சிலர் கடலில் குளிப்பார்கள். மணல் பரப்பில் விரைந்து சென்று அவர்களை கட்டுப்படுத்துவது கடினம். இந்த நேரத்தில் குதிரைப்படை வீரர்கள் விரைந்து சென்று தடையை மீறுபவர்களை அப்புறப்படுத்துகின்றனர். இந்த பணியில் தினமும் 8 குதிரைப்படை வீரர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கூடுதல் காவல் ஆணையர் சேஷசாய் மேற்பார்வையில், மோட்டார் வாகன பிரிவு துணை ஆணையர் ரவிசந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் குதிரைப்படை செயல்பட்டு வருகிறது. ஒரு இன்ஸ்பெக்டர் 30 காவலர்கள் குதிரைப்படையில் உள்ளனர். சென்னை குதிரைப்படையில் 6 ஆண் குதிரை உட்பட 19 குதிரைகள் உள்ளன. ஒவ்வொரு குதிரையையும் அடையாளப்படுத்த தனி எண்ணும், பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
3 மாதங்களுக்கு ஒருமுறை குதிரைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் மெரினா பாதுகாப்பு பணிக்கு சென்ற குதிரைகளில் ஒன்று திடீர் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தது. இதைத் தொடர்ந்து அனைத்து குதிரைகளுக்கும் முழு மருத்துவ பரிசோதனை செய்ய சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
அதன்படி, துணை ஆணையர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில் எழும்பூர் குதிரைப் படை வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று காலை 8 மணிக்கு நடத்தப்பட்டது. 5 கால்நடை மருத்துவர்கள் குதிரைகளுக்கு ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்தனர். முழு உடல் பரிசோதனையும் நடத்தப்பட்டது.
இதுகுறித்து குதிரைப் படை வீரர்கள் கூறியதாவது: குதிரைகளுக்கு 21 வகையான உணவுகள் சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. தினமும் 4 முறை உணவு வழங்கப்பட்டு வருகிறது. குதிரைகளை பராமரிப்பதற்கு காவல்துறையில் தனியாக ஆட்கள் உள்ளனர். சட்டம் ஒழுங்கை சிறப்பாக பேணுவதற்காக குதிரைப் படை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் காலையில் 8 குதிரைகள், மாலை 8 குதிரைகள் மெரினா பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்படுகின்றன. தற்போது 19 குதிரைகள் உள்ளன. விரைவில் மேலும் 15 குதிரைகள் வெளிமாநிலத்தில் இருந்து வாங்கப்பட உள்ளன. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மெரினாவில் எம்ஜிஆர் நினைவிட நுழைவாயிலில் மேம்படுத்தப்பட்ட பறக்கும் குதிரை வைக்கப்பட்டது. இந்த பறக்கும் குதிரை 19 வயது நிரம்பிய சென்னை குதிரைப் படையில் உள்ள கிரேட்வாரியர் என்ற குதிரையை மாடலாக வைத்து வடிவமைக்கப்பட்டது. குதிரையின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவே தற்போது முழு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT