Published : 18 Apr 2023 04:00 AM
Last Updated : 18 Apr 2023 04:00 AM
சென்னை: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் முதல்முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளது. இத்தொடர் வரும் ஆக.3 முதல் 12-ம் தேதி வரை சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற உள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி சென்னையில் நடத்தப்பட இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி தொடர்பாக சென்னையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக இளைஞர் நலன், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: 2023-ம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரை சென்னையில் நடத்துவது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. ஒருகாலத்தில் தென் இந்திய ஹாக்கியின் தலைமையிடமாக சென்னை நகரம் இருந்தது. இங்கு புகழ்பெற்ற பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரை இங்கு நடத்துவது இப்பகுதியில் விளையாட்டுக்கு மேலும் புத்துயிர் கொடுக்கும் என்று நம்புகிறேன்.
மேலும், ஆசியாவின் சிறந்த அணிகளின் ஆட்டங்களை பார்ப்பது, ஹாக்கியை தங்கள் சாதனைக் களமாக தேர்வு செய்ய இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹாக்கி இந்தியா அமைப்பின் பொதுச் செயலாளர் போலாநாத் சிங் கூறியதாவது: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கை தேசிய ஹாக்கி கூட்டமைப்பு அதிகாரிகள் ஏற்கெனவே ஆய்வு செய்து, போட்டிக்கான ஏற்பாடுகளையும் பார்வையிட்டு சென்றுள்ளனர்.
சமீபகாலமாக, ஒடிசா மாநிலமே முக்கியமான சர்வதேச ஹாக்கி போட்டிகளை நடத்தும் மையமாக இருந்து வருகிறது. ஆனால், சர்வதேச போட்டிகளை நாட்டின் பிற மாநிலங்களுக்கும் கொண்டு செல்வதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் பல்வேறு வயது பிரிவுகளில் முக்கியமான தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தியுள்ளது.
அரசின் ஆதரவுடன் வெற்றிகரமான மற்றும் மறக்கமுடியாத வகையில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரை நாங்கள் நடத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில் முதல்முறை: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதல்முறை. ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் 2011, 2016-ல்இந்தியா சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 2018-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் இணைந்து சாம்பியன் பட்டத்தை இந்திய அணி பகிர்ந்து கொண்டது.
அதேநேரம், சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. கடைசியாக இங்கு கடந்த 2007-ம் ஆண்டு ஆடவருக்கான ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றது. அதன் இறுதிப் போட்டியில் இந்தியா 7-2 என்ற கோல் கணக்கில் கொரியாவை வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
ஆசிய அணிகள் பங்கேற்கும் மதிப்புமிக்க இந்த தொடர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடர், வரும் செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கு சிறந்த முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
பாக்., சீனா பங்கேற்கிறதா?: 3 முறை சாம்பியனான பாகிஸ்தான், சீனா ஆகிய அணிகள் இத்தொடரில் கலந்துகொள்வதை இன்னும் உறுதி செய்யவில்லை. இருப்பினும் இந்த இரு அணிகளும் வரும் 25-ம் தேதிக்குள் தாங்கள் பங்கேற்பதை உறுதி செய்யும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
போட்டியை நடத்தும் இந்தியாவுடன், ஆசிய ஹாக்கி கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியனான தென் கொரியா, மலேசியா, ஜப்பான் ஆகிய அணிகளும் இத்தொடரில் கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT