Published : 18 Apr 2023 05:35 AM
Last Updated : 18 Apr 2023 05:35 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவரை அவரது வீட்டில் கொலை செய்ய முயன்ற சென்னையைச் சேர்ந்த கூலிப் படையினர் இருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன் உட்படட 6 பேர்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டவர் தரணி முருகேசன். இவரது வீடு ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தரணி முருகேசனின் வீட்டருகே நின்ற அவரது காரில் மோதினர். அப்போது அங்கிருந்த பாஜகவினர் மற்றும் தரணி முருகேசனின் தோட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினர்.
அப்போது இருவரும் தாங்கள் வைத்திருந்த பெரிய அரிவாளை எடுத்து அவர்களை வெட்டினர். இதில் தோட்டத் தொழிலாளி எல்.கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (39) காயமடைந்தார். அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், அங்கிருந்தவர்கள் இருவரையும் பிடித்து கேணிக்கரை போலீஸில் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தின்போது தரணி முருகேசன் வீட்டினுள் கட்சியினருடன் பேசிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து, தரணி முருகேசனை கொலை செய்ய பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன், பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகநாதன் ஆகியோர் கூலிப்படையை அனுப்பியுள்ளதாக கூறி, அவர்களை கைது செய்ய வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலையில் கட்சியினர் அரைமணி நேரம் மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. பி.தங்கதுரை, டிஎஸ்பி ராஜா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு தரணி முருகேசனிடம் விசாரித்தனர். பிடிபட்டவர்கள் சென்னை எண்ணூரைச் சேர்ந்த மோகன்(34), புதுவண்ணாரப்பேட்டை சுரேஷ்(34) எனவும், இவர்கள் கூலிப்படையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. ராமநாதபுரம் எம்எஸ்கே நகரைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஸ்வரன் அழைத்ததன் பேரில் அவர்கள் தரணி முருகேசனை கொலை செய்ய வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சம்பவத்தில் காயமடைந்த கணேசன் அளித்த புகாரின்பேரில், மோகன், சுரேஷ், விக்னேஸ்வரன், வழக்கறிஞர் சண்முகநாதன், கதிரவன், கதிரவனின் ஓட்டுநர் பாலமுருகன் என்ற சேட்டை பாலா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
விக்னேஸ்வரன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த மோகன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 18 வழக்குகள், சுரேஷ் மீது 8 வழக்குகள், விக்னேஸ்ரவன் மீது பல வழக்குகள், பாலமுருகன் மீது 5 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பாலமுருகனை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. பி. தங்கதுரையிடம் கேட்டபோது, தரணி முருகேசனை கொலை செய்ய விக்னேஸ்வரன் தங்களை அழைத்து வந்ததாக சென்னையைச் சேர்ந்த மோகன், சுரேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
பாஜகவினர் ஆறுதல்: நேற்று காலை பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் பாஜகவினர், தரணி முருகேசனின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறினர். தொடர்ந்து கருப்பு முருகானந்தம் தலைமையில் தரணி முருகேசன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன் உள்ளிட்டோர் மாவட்ட எஸ்பியை சந்தித்து கொலை முயற்சியில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT