Published : 05 Sep 2017 09:45 AM
Last Updated : 05 Sep 2017 09:45 AM
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தனது மகளுக்கு மருத்துவம் படிக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் புறவாசல் வழியாக உதவி பெற்றுக்கொண்டு, தற்போது நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசி வருகிறார். அவர், தனது மகளுக்கு ஒரு நீதி, அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருவது வேதனை அளிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் ‘தி இந்து’ செய்தியாளரிடம் அவர் கூறியது: 2015-ம் ஆண்டில் சட்டப் பேரவையில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக் கொண்டிருந்தபோது, அமைச்சர் ஒருவர் எழுந்து, ‘உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதல்வர் ஜெயலலிதாவிடம் வந்து மருத்துவப் படிப்பில் சேர உதவி கோரினீர்கள். அடுத்த நிமிடமே, அம்மா (ஜெயலலிதா) உங்கள் மகளுக்கு எம்பிபிஎஸ் சீட் வாங்கிக் கொடுத்தாரே. அதை மறந்துவிட்டீர்களா’ எனக் கேட்டார்.
அப்போது கிருஷ்ணசாமி, ‘நான் மறக்கவில்லை, அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன்’ எனக் கூறி முதல்வரை பார்த்து வணக்கம் போட, இந்த வணக்கத்தை வேறு எங்காவது போடுங்கள் என்பதுபோல ஜெயலலிதா முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொள்ள, டாக்டர் கிருஷ்ணசாமியின் சுயநலம், அப்போது சட்டப்பேரவையின் மேஜை மீது பொத்தென விழுந்தது.
வேடிக்கை பார்க்கும் அரசு
ஒரு தலித் குழந்தைக்கு அத்தகைய உதவி பெற்றதில் தவறே இல்லை. ஆனால், இப்படி புறவாசல் வழியாக உதவியை பெற்றுக்கொண்டவர் தனது மகளுக்கு ஒரு நீதி, நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் போன அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருவதுதான் வேதனை.
பாஜகவும், அதிமுக அரசும் வேடிக்கை பார்க்கிறார்கள். ஊடகங்கள் அவரை தேடிப் பிடித்து கருத்தை கேட்கிறார்கள். கேப்பையில் நெய் மட்டுமல்ல; பொய்யும்கூட வழிகிறது.
இதில், பாலபாரதி யார் என்றே தெரியாது என டாக்டர் கிருஷ்ணசாமி கூறி வருவதாக அறிந்தேன். திண்டுக்கல் தொகுதியில் 3 முறை தொடர்ந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு, சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன். நான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து சில இருக்கைகள் தள்ளி இவர் அமர்ந்திருந்தார். இவர் என்னை பார்த்து யார் என்றே தெரியாது எனக் கூறியிருக்கிறார்.
இவர் டாக்டர் என்றுதான் நான் நினைத்திருந்தேன். இவ்வளவு பெரிய நோயுடன் நோயாளியாக இருப்பார் எனத் தெரியவில்லை என்று பாலபாரதி கூறினார்.
சிபிஐ விசாரணை தேவை
முன்னதாக கோவையில் நேற்று டாக்டர் கிருஷ்ணசாமி, ‘மருத்துவப் படிப்பு கிடைக்காவிட்டால், விவசாயப் படிப்பை தேர்வு செய்யப்போவதாக கூறியிருந்த மாணவி அனிதா, திடீரென தற்கொலை செய்துகொண்டார் என்பதை எப்படி நம்புவது? இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்த பிரச்சினையில் அரசியல் செய்கின்றன. மத்திய, மாநில அரசுகளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பார்க்கிறார்கள். இதை அனுமதிக்கக்கூடாது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT