Published : 26 Sep 2017 02:51 PM
Last Updated : 26 Sep 2017 02:51 PM

மூதாட்டிக்கு வாடகை பாக்கி: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சம்பளம் வழங்க உயர் நீதிமன்றம் தடை

மூதாட்டி ஒருவரின் நிலத்தில் வட்டாட்சியர் அலுவலகம் அமைத்து அதற்கான வாடகை அளிக்காத புகாரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உட்பட மூவருக்கு இம்மாத சம்பளம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது

ஃபரிதா சவுகத் (69) என்ற மூதாட்டிக்கு சொந்தமான இடம் மாதவரத்தில் உள்ளது. கடந்த 2009-ல் அந்த இடத்தில் வருவாய் துறையினர் வட்டாச்சியர் அலுவலகமாக அமைத்திருக்கிறார்கள்.

ஆனால் இதற்கான வாடகை ஒப்பந்தத்தை வருவாய் துறை அலுவலகம் ஃபரிதா சவுகத்திடம் போடாமலே காலம் தாழ்த்தியுள்ளனர். அலுவலகத்துக்கான மாத வாடகையையும் ஃபரிதாவிடம் வழங்கவில்லை.

இதனையடுத்து இந்த புகார் தொடர்பான மனுவை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார் ஃபரிதா. ஆனால் ஃபரிதாவின் மனுவை மாவட்ட ஆட்சியர் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது கட்டிடத்தை அலுவலகமாக எடுத்து வாடகை தராமல் என்னை அலைகழிக்கிறார்கள் என்று ஃபரிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், "ஃபரிதாவின் இடத்தில் அலுவலகம் அமைக்க முறையான ஒப்பந்தம் போடாத நிலையில் அதற்கான வாடகையையும்  அவரிடம் தரவில்லை. வேண்டும் என்றே ஃபரிதாவை அதிகாரிகள் அலைக்கழித்துள்ளார்கள்.

ஆகவே முப்பத்து நாட்களுக்குள் ஃபரிதாவின் இடத்தில் அலுவலகம் அமைத்ததற்கான வாடகை ஒப்பந்தம் போட வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள வாடகை தொகையையும் அவருக்கு முப்பது நாட்களுக்குள் வழங்க வேண்டும்.

அதுவரையில் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை செயலாளர், வட்டாச்சியர் ஆகியோருக்கு  இந்த மாத சம்பளத்தை அளிக்க தடை விதிக்கிறேன்" என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x