Published : 17 Apr 2023 04:18 PM
Last Updated : 17 Apr 2023 04:18 PM

கல்வி உதவித் தொகை இருமடங்கு, ‘மீண்டும் இல்லம்’ திட்டம்: மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழக அரசின் புதிய அறிவிப்புகள்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: "மாற்றுத் திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்கு தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கி கடனுதவி வழங்கும் திட்டம் ரூ.1.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்" என்று மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அமைச்சரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிப்புகளின் விவரம்:

  • மாற்றுத் திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்கு தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கி கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் 1,000 நபர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் ரூ.1.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • உயர்கல்வி பயிலும் 1,000 பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தலா ரூ.14,000 மதிப்பில் நவீன வாசிக்கும் கருவி வழங்கும் வகையில் ரூ.1.4 கோடி நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • ஒரு கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 500 பயனாளிகளுக்கு ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
  • உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணம், மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித் தொகையினை உயர்த்தி, கூடுதலாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

  • செவித்திறன் குறைபாடு மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வாயிலாக சைகை மொழிபெயர்ப்பாளர் பயிற்சி அளிக்க ரூ.15 லட்சம் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • மாற்றுத் திறனாளிகளின் சேவையில் ஈடுபட்டுள்ள அரசு நிதியுதவி பெறும் ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் மற்றும் மறுவாழ்வு இல்லங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மதிப்பூதியத்தினை உயர்த்தி வழங்குவதற்காக ரூ. 5.34 கோடி நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • அரசு நிதியுதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் 326 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளைப் பராமரிக்க ஏதுவாக மாதந்தோறும் ரூ.4,500 மதிப்பூதியத்தில் பராமரிப்பு உதவியாளர்களை நியமனம் செய்ய ரூ.1.76 கோடி நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் பத்து அரசு மறுவாழ்வு இல்லங்களில் தொழுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்து, தங்கியுள்ள 592 மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் உணவூட்டு மானியத்தினை ரூ.42லிருந்து, ரூ.100-ஆக உயர்த்தி ஆண்டுக்கு ரூ.1.24 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை சமுதாயத்தில் ஒருங்கிணைக்கும் பொருட்டு "மீண்டும் இல்லம் (Home Again)" எனும் புதிய திட்டத்தினை முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்களில் அறிமுகப்படுத்தி, ஒரு மாவட்டத்திற்கு இரண்டு இல்லங்கள் வீதம் பத்து இல்லங்கள் 40 நபர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

  • மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், அரசுத் துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை ஓராண்டிற்குள் நிரப்புவதற்கு அந்தந்த துறைகள் மூலம் பணியிடங்களை நிர்ணயம் செய்து, சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தப்பட்டு பணி வாய்ப்புகள் வழங்கப்படும்.
  • மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையினை இருமடங்காக உயர்த்தி, 22,300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.7 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
  • மனநலம் சார் மற்றும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 150 பயனாளிகள் பயன்பெறும் வகையில், நான்கு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு மூன்று இல்லங்கள் கட்டுவதற்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • அரசு நிதியுதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்பு பள்ளிகள் மற்றும் ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இணை உணவு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x