Published : 17 Apr 2023 02:56 PM
Last Updated : 17 Apr 2023 02:56 PM

மருத்துவத் துறை மானியக் கோரிக்கை: அரசு மருத்துவர்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

கோப்புப்படம்

சென்னை: "நாளை நடைபெறவுள்ள மருத்துவத் துறை மானியக் கோரிக்கையின்போது, அரசு மருத்துவர்கள் நீண்டகாலமாக போராடி வரும், கலைஞரின் அரசாணை 354-ஐ அமல்படுத்துவோம் என்ற அறிவிப்பை தமிழக சட்டசபையில் முதல்வர் வெளியிட வேண்டும்" என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தின் இந்த 2022-23-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த மார்ச் 18-ம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் மறுநாள் மார்ச் 19-ம் தேதி அரசின் 2-வது வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாளை (ஏப்.18) சுகாதாரத்துறையின் மானியக் கோரிக்கை நடைபெறவுள்ளது. அப்போது, அரசு மருத்துவர்களின் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டுமென்று தமிழக முதல்வருக்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள்:

> தமிழக சட்டசபையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதியன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. பொதுவாக அனைத்து துறைகளிலும், உயிர்காக்கும் துறையான சுகாதாரத் துறைக்கு முதல்வர் அதிக முக்கியத்துவம் தருகிறார்.

> முதல்வர் பதவியேற்ற போது கரோனா தொற்று உச்சத்தில் இருந்ததால் அசாதாரண சூழ்நிலை நிலவியது. மேலும் அப்போது சட்டசபை கூட்டத்தொடரை வழக்கமான தலைமைச் செயலகத்தில் நடத்த முடியாமல், கலைவாணர் அரங்கில் நடத்தியதை யாருமே மறக்க முடியாது.

> முதல்வரின் வழிகாட்டுதலில் கரோனா தொற்று பரவலை விரைவாக கட்டுப்படுத்தியதோடு, உயிரிழப்பையும் நாம் வெகுவாக குறைத்தோம். இருப்பினும் அந்த கடினமான தருணத்தில் உறுதுணையாக இருந்த அரசு மருத்துவர்களின் கோரிக்கையை இன்னமும் நிறைவேற்றவில்லை என்ற வலியும், வேதனையும் இங்கு ஒவ்வொரு மருத்துவரிடத்தும் அதிகமாகவே இருக்கிறது.

> பொதுவாக அதிமுக ஆட்சியாக இருந்தாலும், திமுக ஆட்சியாக இருந்தாலும், இங்கு சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். ஆனால் அரசு மருத்துவர்கள் நலனுக்கான அறிவிப்புகளை இதுவரை வெளியிட்டதே இல்லை.

> கடந்த ஆண்டு சட்டசபையில் பேசிய மருத்துவர் எழிலன் மற்றும் சின்னத்துரை, அரசாணை 354ஐ அமல்படுத்த வேண்டும் என அரசை வலியுறுத்தினார்கள். இருப்பினும் இன்று வரை அரசு மருத்துவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை.

> குறிப்பாக சட்டசபையில் அன்றையதினம் டாக்டர் எழிலன் பேசும் போது, சுகாதாரத் துறையின் கட்டமைப்பு (infrastructure) என்பது, கட்டடமோ, கட்டிட வல்லுந‌ர்களோ, உபகரணங்களோ இல்லை. மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும்தான் என்று விளக்கமாக தெரிவித்ததை அரசு மருத்துவர்கள் அனைவரும் நன்றியோடு இன்றும் நினைவில் வைத்துள்ளோம்.

> பொதுவாக எந்த வேலை செய்வதாக இருந்தாலும் மன நிம்மதியுடன் பணியாற்ற வேண்டும். அப்படியிருக்க நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் உயிர்காக்கும் மருத்துவர்களை தங்கள் சம்பளத்திற்காக வருடக்கணக்கில் போராட வைப்பதை, நம் முதல்வர் நிச்சயம் விரும்ப மாட்டார் என்று நாம் நம்புகிறோம்.

> மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட 40 ஆயிரம் ரூபாய் குறைவாக, இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு ஊதியமாக தரப்படுகிறது. இதிலிருந்து நம் அரசு மருத்துவர்களுக்கு தமிழகத்தில் எந்த அளவுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்பது தெரிகிறது.

> அதுவும் சுகாதாரத் துறையில் பல்வேறு திட்டங்களுக்காக அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடுகிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறையின் இதயமாக உள்ள அரசு மருத்துவர்களின் சம்பளத்திற்காக, அதுவும் ஆண்டுக்கு கூடுதலாக வெறும் 300 கோடி ரூபாயை ஒதுக்க மறுப்பதை, தமிழக முதல்வர் ஏற்றுக்கொள்ள மாட்டார் என நம்புகிறோம்.

> இதுவரை கலைஞர் பெயரில் எத்தனையோ திட்டங்களை இங்கு அறிவித்துள்ளார்கள். ஆனால் நீண்டகாலமாக அரசு மருத்துவர்கள் எதற்காக இங்கு போராடி வருகிறார்களோ, அந்த கலைஞரின் அரசாணை 354 ஐ அமல்படுத்துவோம் என்ற அறிவிப்பை தமிழக சட்டசபையில் முதல்வர் வெளியிட்டால், நிச்சயம் கட்சி சார்பின்றி 234 சட்டமன்ற உறுப்பினர்களுமே கரவொலி எழுப்பி, அரசை பாராட்டுவார்கள்.

> மேலும் தொடர்ந்து நம்முடைய தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு உடனடியாக வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டால், மருத்துவர்கள் இன்னும் மிகுந்த துடிப்போடும், உற்சாகத்துடனும் பணியாற்றுவார்கள் என்பதை நாம் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x