Published : 17 Apr 2023 03:53 AM
Last Updated : 17 Apr 2023 03:53 AM
சென்னை: திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்பதுடன், ரூ.500 கோடி இழப்பீடு வழங்காவிட்டால் சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திமுகவினர் 12 பேரின் சொத்து பட்டியல் என்று சில விவரங்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 14-ம் தேதி சென்னையில் வெளியிட்டார். இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் திமுக எம்.பி. வில்சன் நேற்று அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின், நாட்டின் சிறந்த முதல்வர்களில் ஒருவராக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். தமிழக தேர்தல் களத்தில் நீங்களும், உங்கள் கட்சியும் முத்திரை பதிக்க முடியாத நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், கட்சி உறுப்பினர்களின் நற்பெயரை களங்கப்படுத்தவும், அவதூறு செய்யவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறீர்கள்.
‘டிஎம்கே ஃபைல்ஸ்’ என்ற தலைப்பில் 15 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் திமுக மீது தவறான, ஆதாரமற்ற, அவதூறான, கற்பனையான பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளீர்கள். திமுகவின் சில சொத்துகளின் மதிப்பை உயர்த்தி, சம்பந்தம் இல்லாத சொத்துகள் உள்ளிட்டவற்றின் மூலம் திமுகவுக்கு மொத்தம் ரூ.1,408.94 கோடி சொத்து இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
வருமான வரித் துறை உள்ளிட்ட உரிய அதிகாரிகளிடம் திமுகவின் சொத்து, கடன் விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சொத்து விவரங்களை மறைத்திருந்தால் அத்துறை நடவடிக்கை எடுத்திருக்கும்.
திமுகவினருக்கு சொந்தமான பள்ளிகளின் மதிப்பு ரூ.3,474.18 கோடி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் மதிப்பு ரூ.34,184.71 கோடி என்பது பொய்யானது. ஒருவர் திமுக உறுப்பினர், நிர்வாகியாக இருந்தாலும், அவருக்கு சொந்தமான சொத்துகள், நிறுவனங்கள்கட்சி சொத்தாக மாறாது.
2018 மார்ச் முதல் 2022 வரை கட்சிகளுக்கு நிதியாக வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மதிப்பு ரூ.9,208 கோடி. அதில், பாஜகவுக்குமட்டுமே ரூ.5,270 கோடி சென்றுள்ளது. இதுவும் முறைகேடாக பெறப்பட்டது என்று கூறமுடியுமா?
முதல்வர் பண மோசடியில் ஈடுபடவே துபாய் சென்றதாக, முற்றிலும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை. 2006-11 ஆட்சியில் அமைச்சராக இருந்த ஸ்டாலின்,சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட பணிகளுக்கான ஒப்பந்தத்தைஒரு நிறுவனத்துக்கு அளிப்பதற்காக ரூ.200 கோடி பெற்றதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறியுள்ளீர்கள். அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுகவும் இத்திட்டத்தை தொடர்ந்தது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இத்திட்டத்தை, மத்திய அமைச்சராக இருந்த வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார். பின்னர், இதன் விரிவாக்கத்தை அப்போதைய முதல்வர் பழனிசாமி முன்னிலையில் பிரதமர்மோடி தொடங்கி வைத்தார். தற்போது 2-ம் கட்டப் பணிகளுக்கும் அதே நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உங்கள் கூட்டணி கட்சியான அதிமுகவும், பிரதமர் மோடியும் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறீர்களா?
உங்கள் பேச்சு, குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள், இணையதளத்தில் இதுதொடர்பான வீடியோவை நீக்கவேண்டும். இழப்பீட்டுத் தொகையாக ரூ.500 கோடி வழங்க வேண்டும். அது முதல்வர் பொது நிவாரண நிதிக்கு செலுத்தப்படும். இந்தஅறிவிப்பு கிடைத்த 48 மணி நேரத்துக்குள் இவற்றை செய்ய தவறினால், உங்களுக்கு எதிராக சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT